

கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று மாலை 8.30 மணியளவில் பதிவிட்ட ட்வீட் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.
அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பாஜகவின் உண்மையான தொண்டாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட்சிக்கு சேவை செய்வது எனது மிகப்பெரிய கடமை. கட்சிக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். யாரும் எவ்விதமான போராட்டத்திலோ இல்லை மரியாதைக் குறைவான செயல்களிலோ ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளாக கர்நாடகமுதல்வராக இருக்கும் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பாஜகவினரே கருத்துகள் கூறி வருகின்றனர். கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் எடியூரப்பாவை விமர்சிக்கின்றனர்.
அத்துடன் எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர். இதனால் பாஜக மேலிடபொறுப்பாளர் அருண் சிங் கடந்த மாதம் பெங்களூருவில் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினார்.
இந்நிலையில் எடியூரப்பா அண்மையில் தனது மகன் விஜயேந்திராவுடன் அவசரமாக டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மாநில விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடியை சந்தித்து பேசிய போது எடியூரப்பா பதவி விலக தயாராக இருப்பதாக கூறியதாக தெரிகிறது. தனது உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.
அதேசமயம் தனது மகன் விஜேயேந்திராவுக்கு கர்நாடக மாநில பாஜகவில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என எடியூரப்பாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை அம்மாநிலத்தைச் சேர்ந்த 30 முக்கிய மடங்களைச் சேர்ந்த மாடதிபதிகள் நேற்று சந்தித்துப் பேசினர்.
இதனைத் தொடர்ந்து பேசிய மடாதிபதிகள், எடியூரப்பா மாற்றப்பட்டால் இந்த மாநிலத்தில் பாஜக அழிந்து விடும் என்று கூறினர்.
இந்நிலையில், எடியூரப்பா சற்று நேரத்துக்கு முன்னதாக பதிவு செய்த ட்வீட் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.