

"ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய அரசு பொய் சொல்கிறது. மத்திய அரசு மீது வழக்கு தொடர வேண்டும்" என சிவசேனா சாடியுள்ளது.
முன்னதாக, இன்று மாநிலங்களவையில் இன்று காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால், கரோனா இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிறைய பேர் சாலைகளிலும் மருத்துவமனைகளிலும் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.
இதற்கு மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதார இணை அமைச்சர் மருத்துவர் பாரதி பிரவீன் பவார், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு பதிவானதாக எந்த ஒரு மாநில அரசோ, யூனியன் பிரதேசமோ பதிவு செய்யவில்லை.
சுகாதாரம் மாநில அரசுப் பட்டியலில் உள்ளது. ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் கரோனா மரணங்கள் குறித்து எங்களுக்கு தொடர்ந்து தகவல் அனுப்புகிறது என்று தெரிவித்தார்.
இது குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், "மத்திய அரசின் இந்த பதிலால் நான் வாயடைத்துப் போனேன். இதை, கரோனா இரண்டாம் அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கேட்டால் என்னாவார்கள். அரசாங்கம் பொய் சொல்கிறது. அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர வேண்டும்" என்றார்.
மேலும், பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து சஞ்சய் ரவுத் கூறுகையில், "பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாடளுமன்ற நிலைக்குழு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரியுள்ளது. அதனை மத்திய அரசு அனுமதிக்கலாமே. உண்மை வெளிவரட்டும். மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால் மத்திய அரசு எதற்காகப் பயப்பட வேண்டும்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில், சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் மற்றும் உள்துறை விவகார அமைச்சக ஊழியர்களை வரும் ஜூலை 28 ஆம் தேதி விசாரிக்கும் எனத் தெரிகிறது.