

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-ல் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி வாரி விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா என, மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் பதில் அளித்தார்.
டி.ஆர்.பாலு நேற்று (ஜூலை 20) மக்களவையில், "மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-ல், பிற்படுத்தப்பட்டோருக்கான, சாதி வாரி விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா? தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுகளில் தொடரும் சட்டச் சிக்கல்களைச் சரி செய்ய, மத்திய அரசால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?" என மத்திய உள்துறை இணையமைச்சர், நித்தியானந்த ராயிடம், விரிவான கேள்வியை எழுப்பினார்.
இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் அளித்த பதில்:
"மார்ச், 2019-ல் வெளியிடப்பட்ட அரசிதழின்படி, மத்திய அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து, மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 நடத்தப்பட்டு வருகின்றது. கரோனா கொள்ளை நோய்த் தொற்றினால், இந்த நடவடிக்கைகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும், மக்கள்தொகைக்கேற்ப தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் இடஒதுக்கீட்டிலும், ஆவன செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நீதிமன்றங்களில் வரும் சட்டச் சிக்கல்களுக்கும் தீர்வுகள் காண்பதற்கு, மத்திய அரசு உரிய முயற்சிகளை எடுத்து வருகின்றது".
இவ்வாறு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் பதிலளித்தார்.