Published : 21 Jul 2021 03:14 AM
Last Updated : 21 Jul 2021 03:14 AM

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம்; நாடாளுமன்றத்தில் 2-வது நாளாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி: இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு

புதுடெல்லி

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நேற்றும் அமளியில் ஈடுபட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13–ம் தேதி வரை நடைபெற உள்ளது. மக்களவை நேற்று முன் தினம் கூடியதும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் வசந்த் உள்ளிட்ட புதிய உறுப்பினர்கள் பதவி யேற்றுக் கொண்டனர். இதையடுத்து புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக இரு அவைகளி லும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதை யடுத்து இரு அவைகளும் நேற்று முன்தினம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ என்ற நிறு வனம் தயாரித்த உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், இரு மத்திய அமைச்சர்கள், நீதிபதி ஒருவர் என சுமார் 300 பேரின் செல்போன் ஒட்டுகேட்கப்பட்டதாக செய்தி வெளியானது.

இது நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியிலும் புயலை கிளப்பியுள்ளது. இந்த மென்பொருளை பயன்படுத்தி அரசு ஒட்டு கேட்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தபோதிலும் எதிர்க்கட்சிகள் ஏற்கத் தயாராக இல்லை.

இந்நிலையில் இரண்டாம் நாளான நேற்று காலை மக்களவை கூடியதும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப் பினர்கள் எழுப்பினர். அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜியின் செல்போன் எண்ணும் ஒட்டுகேட்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந் தஸ்து விவகாரத்தை எழுப்பினர். அனை வரும் அமளியில் ஈடுபட்டனர்.

உறுப்பினர்களை இருக்கைக்கு செல்லு மாறு சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண் டார். ஆனால் உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக அவை அடுத்தடுத்து பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.பின்னர் மீண்டும் கூடிய நிலையில் வியாழக்கிழமைக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதுபோல் மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி உறுப்பினர் கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதை யடுத்து பகல் 1 மணிக்கு அவை கூடியதும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆந் திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை எழுப்பினர். அவையின் மையப் பகுதிக்கு வந்து, ‘எங்களுக்கு நீதி வேண்டும்’ என அவர்கள் முழக்கமிட்டனர்.

“உறுப்பினர்களை இருக்கைக்கு திரும்ப வேண்டும், கரோனா பெருந்தொற்று குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும்” என அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் கேட்டுக்கொண்டார். அவை முன்னவர் பியூஷ் கோயலும் இதை வலியுறுத்தினார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதை ஏற்கவில்லை.

அதேவேளையில் விவாதத்தை தொடங்கு மாறு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவையின் துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அமளிக்கு மத்தி யில் அவர் பேச மறுத்துவிட்டார். இதை யடுத்து நியமன உறுப்பினர் ஸ்வபன் தாஸ் குப்தா பேசத் தொடங்கினார். ஆனால் உறுப்பினர்களின் அமளியால் அவையை 15 நிமிடங்களுக்கு துணைத் தலைவர் ஒத்தி வைத்தார்.

பிற்பகலில் அவை கூடியதும் கரோனா தொடர்பான விவாதம் நடைபெற்றது. பிறகு வியாழக்கிழமைக்கு அவை ஒத்தி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x