

கேரளாவில் கரோனா ஊரடங்கு காலம் தொடங்கியதிலிருந்து பெண்களுக்கு எதிரான வன்முறையும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு, உரிமை, இணைய சுதந்திரம் ஆகியனவற்றை பாதுகாக்கும் வகையில் "Pink Protection" பிங்க் ப்ரொடக்சன் என்ற திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கிவைத்துள்ளார்.
இதற்காக 10 கார்கள், 40 இருச்சக்கர வாகனங்கள், மற்றும் 20 சைக்கிள்களை போலீஸாருக்கு முதல்வர் ஒதுக்கினார். இந்த சிறப்புப் படை இந்த வாகனங்களில் ரோந்து மேற்கொள்ளும்.
பெண்கள் தைரியமாக, பிங்க் ப்ரொடக்சன் ரோந்து காவலர்களிடம் தங்களின் இன்னல்களைத் தெரிவிக்கலாம். வரதட்சனைப் புகார், இணையம் மூலமாக விரியும் ஆபத்து ஆகியனவற்றிலிருந்து இந்தக் குழு பெண்களைக் காக்கும்.
ஏற்கெனவே மாநிலத்தில் பிங்க் பேட்ரோல் என்ற முறை அமலில் இருந்தும் இந்த புதிய "Pink Protection" பிங்க் ப்ரொடக்சன் திட்டம் கூடுதல் பலம் சேர்க்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து முதல்வர் பினராயி விஜயன், "இந்தப் புதிய திட்டத்தின்படி காவலர்கள் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று குடும்ப வன்முறை தொடர்பான தகவல்களைப் பெறுவர். இந்தக் குழுவில் உள்ள அதிகாரிகள் பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் பேசி அவர்கள் பகுதியில் ஏதேனும் குடும்ப வன்முறை பிரச்சினைகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிவர்.
இந்தத் திட்டம் 14 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்" என்றார்.
அண்மையில் கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பின்னர் வெளியான ஆய்வுக் கட்டுரைகள் பலவும் நாட்டிலேயே கேரளாவில் வரதட்சனைக் கொடுமை அதிகமாக இருப்பதாக சுட்டிக் காட்டின.
இந்நிலையில், கேரளாவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இத்திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.