கரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை: மத்திய அரசு தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா 2-வது அலையின்போது, மாநில அரசுகள் அறிக்கையின்படி நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான நோயாளிகள் சாலைகளில் விழுந்து உயிரிழந்தது குறித்தும், மருத்துவமனைகளில் உயிரிழந்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாகப் பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது:

''கரோனா 2-வது அலையில் நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையிலிருந்து தெரியவருகிறது.

முதல் அலையின்போது சராசரியாக 3,095 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில் 2-வது அலையில் 9 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது. ஆனாலும், ஆக்சிஜன் சப்ளையைச் சீராக மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து வழங்கியது.

சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் வருவது, மாநில அரசுகளுக்கு உட்பட்டது. அவர்கள் அளித்த தகவலின்படி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நடக்கவில்லை.

உயிரிழப்பு குறித்து எவ்வாறு தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வெளியிட்டு இருந்தது. அதன்படி பார்த்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த உயிரிழப்பும் மாநிலங்களில் நிகழவில்லை.

மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுடனும், ஆக்சிஜன் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் ஆகியோருடனும் அவ்வப்போது கலந்தாய்வு செய்து, மாநிலங்களின் தேவையை அறிந்துதான் ஆக்சிஜன் அளவு மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது''.

இவ்வாறு பாரதி பிரவீண் பவார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in