

அவசர காலப் பயன்பாட்டுக்கு கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது குறித்துத் தொழில்நுட்ப நிபுணர்களுடன் பரிசீலிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே உலக சுகாதார நிறுவனத்தின் அவசர காலப் பயன்பாட்டுப் பட்டியலில் இந்தியத் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியைச் சேர்க்க, பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் இதுவரை அங்கீகரிக்கவில்லை.
இந்நிலையில் கோவாக்சினுக்கு அவசர காலப் பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்துத் தொழில்நுட்ப நிபுணர்களுடன் பரிசீலிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் கூறியதாவது:
“உலக சுகாதார நிறுவனத்தின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் டோஸ் மாடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. பைஸர், அஸ்ட்ரா ஜெனிகா, மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், சினோவாக் மற்றும் சினோஃபார்ம் ஆகிய தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசர காலப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவாக்சினைப் பொறுத்தவரையில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் சந்திப்பு நடைபெற்றது. தற்போது தொழில்நுட்ப நிபுணர்களுடன் அவசர காலப் பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
டெல்டா வகை கரோனா வைரஸ் பரவல் சுமார் 100 நாடுகளில் பரவியுள்ளது. இதன் மூலம் உலகளாவிய அளவில் அச்சுறுத்தும் வைரஸாக, டெல்டா வகை வைரஸ் விரைவில் மாறும்.
வைரஸ் பரவலை நாம் அனுமதிப்பது எவ்வளவு தூரத்துக்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு வைரஸின் உற்பத்தி அதிகரித்து, உருமாற்றம் அடையும் வேகமும் அதிகரிக்கும். பொது சுகாதாரமும் சமூகத்தில் தொற்றுப் பரவல் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.
மக்கள் மீண்டும் தங்களின் வழக்கமான இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப விரும்புகின்றனர் என்பது புரிகிறது. ஆனால் அதைச் செய்வதில் உள்ள பெரிய ஆபத்தை நாம் மீண்டும் மீண்டும் நினைவில்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்தார்.
முன்னதாக, ஆகஸ்ட் - செப்டம்பர் வாக்கில் கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருந்தது. கோவாக்சின் தடுப்பூசி அவசர காலப் பட்டியலில் இடம்பெற்றுவிட்டால், இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணி இன்னும் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.