கரோனா அரசியல் பிரச்சினையல்ல; மனிதநேயம் தொடர்பானது: பிரதமர் மோடி பேச்சு

பாஜக எம்.பி.க்கள் நாடளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற காட்சி | படம் ஏஎன்ஐ
பாஜக எம்.பி.க்கள் நாடளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற காட்சி | படம் ஏஎன்ஐ
Updated on
2 min read

கரோனா பெருந்தொற்று அரசியல் பிரச்சினை அல்ல, மனிதநேயம் தொடர்பான பிரச்சினை என்று பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று முதல் நடந்து வருகிறது. இன்றையக் கூட்டத்தொடர் தொடங்கும் முன், பாஜக எம்.பி.க்களின் கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்தில் பாஜக எம்.பி.க்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி எம்.பி.க்களிடம் பேசியது குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நிருபர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினை அல்ல. ஆனால், நமக்கும் இந்த அரசுக்கும் மனிதநேயம் தொடர்பான பிரச்சினை என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 100 ஆண்டுகளுக்குப்பின் இந்த பூமியில் இதுபோன்ற பெருந்தொற்று உருவாகியுள்ளது.

100 ஆண்டுகளுக்கு முன் மக்கள் பட்டினியால் உயிரிழந்தனர், ஆனால், முதல்முறையாக, மிகப்பெரிய அளவிலான மக்கள் ரேஷன் பொருட்களைப் பெருந்தொற்று காலத்தில் பெற்றார்கள், ஒருவர் கூட பட்டினியுடன் தூங்கவில்லை. நமது கடமையை பொறுப்புடன் செய்துள்ளோம், யாரும் சார்பாக நடக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடந்து கொள்ளும் முறை குறித்து பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். குறிப்பாக காங்கிரஸ் கட்சி அதிகாரம் தங்களின் உரிமை, என நினைத்து தனது விருப்பம்போல் செயல்படுகிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் சுமூகமாக நடக்க விரும்புகிறோம். அவையை நடத்தவிடாமல் அமளி செய்து, காங்கிரஸ் கட்சி மிகுந்த பொறுப்பற்ற நடத்தையை வெளிப்படுத்துகிறது என்று பிரதமர் வேதனை தெரிவித்தார்

தடுப்பூசியாக இருந்தாலும் சரி, ஏழைகளுக்கான நலத்திட்டங்களாக இருந்தாலும் சரி, மக்களுக்கு கிடைப்பதை எம்.பி.க்கள் உறுதி செய்ய வேண்டும். 41 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திவிட்டார்கள், ஆனால், டெல்லியில் உள்ள முன்களப்பணியாளர்கள் பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் மத்தியஅரசுக்கும், இஸ்ரேலிய நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை முறைப்படி எழுப்பினால் எழுப்பட்டும்.

பாஜக எம்.பி.க்கள் மத்திய அரசின் உண்மையான செயல்பாடுகளை மக்களின் முன் எடுத்துச் சென்று, எதிர்க்கட்சிகளின் பொய்களை வெளிப்படுத்த வேண்டும். மக்களிடம் தொடர்பும், உண்மையும் இல்லாமல், எதிர்க்கட்சிகளால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது.

மக்களைப் பற்றி காங்கிரஸ் கட்சி கவலைப்படவில்லை. 60 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்திருப்பதற்கான உரிமை உணர்வு இன்னும் காங்கிரஸிடம் உள்ளது. மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அசாம் மே.வங்கத்தில் காங்கிரஸ் கட்சி தங்களின் கடமையை எதிர்க்கட்சியாகக் கூட செய்ய முடியவில்லை. மக்களின் நலன்சார்ந்த திட்டங்கள் ஏதும் செய்யப்படாவிட்டால் எதிர்க்கட்சியாக இருப்போர், அதை வலிமையாக எழுப்ப வேண்டும் எனப் பிரதமர் தெரிவித்தார்

இவ்வாறு பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in