

இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்களை ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.யும் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டு கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகின. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல்புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி, ட்விட்டரில் பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கோரிக்கை விடுத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
ஒட்டுக் கேட்பு விவகாரம் மிகப்பெரியதாக இருக்கிறது. நம்முடைய செல்போன் உரையாடல்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து வரும் இஸ்ரேல் நிறுவனத்துக்கும் மோடி அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்காவில் நடந்த வாட்டர்கேட் ஊழல் போன்று பாஜகவுக்கு பாதைக்கு பெரும் சோதனையாக மாறிவிடும்.
யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்காக பணியாற்றும் ஒரு வர்த்தக ரீதியான நிறுவனம் பெகாசஸ் உளவு மென்பொருள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவில் ஒட்டுகேட்பு நடவடிக்கை நடத்த யார் இஸ்ரேலிய நிறுவனத்துக்கு பணம் கொடுத்தார்கள் என்பது தவிர்க்க முடியாத கேள்வியாக இருக்கிறது.
இந்திய அரசு பணம் செலுத்தவில்லை என்றால், வேறு யார் இஸ்ரேலிய நிறுவனத்துக்கு பணம் கொடுத்தார்கள். மக்களுக்கு இந்த உண்மையைச் சொல்ல வேண்டிய கடமை மோடி அரசுக்கு இருக்கிறது
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.