Published : 20 Jul 2021 07:34 AM
Last Updated : 20 Jul 2021 07:34 AM

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு : ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் வைஷ்னவ், முன்னாள் தேர்தல் ஆணையர் லவாசா கண்காணிப்பு

பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்தி | கோப்புப்படம்

புதுடெல்லி


இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மத்திய அமைச்சர் அஸ்வினி உள்ளிட்ட பலரின் பெயர்கள் ஒட்டுக் கேட்பு பட்டியலி்ல் இடம் பெற்றுள்ளன.

பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டு கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகின. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் தி வயர்' இணையதளம் வெளியிட்ட செய்தியின்படி, “ இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், நீதிபதி ஒருவர், மத்திய அமைச்சரவையில் இரு அமைச்சர்கள், பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருப்போர் எனப் பலருடைய செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன.

இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, நெட்வொர்க் 18, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய நாளேடுகளில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஏஎஃப்பி, சிஎன்என், தி நியூயார்க் டைம்ஸ், அல் ஜசிரா ஆகிய நாளேடுகளில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் செல்போன்களும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன.

பிரபலமான பத்திரிகையாளர்களான சித்தார்த் வரதராஜன், ஷிசிர் குப்தா, பிரஷாந்த் ஜா, ராகுல் சிங், சந்தீப் உன்னிதான், மனோஜ் குப்தா, விஜய்தா சிங், கோபிகிருஷ்ணன் உள்ளிட்டோரின் செல்போன்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதாகப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல்புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி ஆகியோர்செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன.

பெகாசஸ்ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளி்த்தும், மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசிய மின்னணுத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் செல்போன் ஒட்டுக் கேட்பு பட்டியலி்ல் இடம் பெற்றுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ இந்த சம்பவத்தின் வரிசையைப் புரிந்துகொள்ள வேண்டும். தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிலரால் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டவை. இந்தியாவின் வளர்ச்சியை உலகளவில் விரும்பாதவர்கள்தான் இதைச் செய்துள்ளனர். இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத இந்தியாவில் உள்ள அரசியல்தலைவர்கள்தான் இதைச்செய்துள்ளார்கள்” எனக் குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுைகயில் “பாரதிய ஜனதா கட்சி அல்ல, பாரதிய ஒட்டுக்கேட்புக் கட்சி. இஸ்ரேல் உளவு மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், தேர்தல் ஆணையர், சொந்த அமைச்சர்களையே உளவு பார்த்துள்ளார்கள். இந்த தேசத்தின் மீது மோடி அரசு தாக்குதல் நடத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x