Published : 19 Jul 2021 06:07 PM
Last Updated : 19 Jul 2021 06:07 PM

ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர், 2 அமைச்சர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்பா? தீவிரமடையும் உளவு மென்பொருள் சர்ச்சை

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், மத்திய ஐடி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் படேல் ஆகியோரின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்தி வெளியானது.

'தி வயர்' இணையதளம் வெளியிட்ட செய்தியின்படி, “ இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், நீதிபதி ஒருவர், மத்திய அமைச்சரவையில் இரு அமைச்சர்கள், பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருப்போர் எனப் பலருடைய செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் பட்டியலில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர், தற்போதைய ஐடி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுகேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இது குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், "பெகாசஸ் உளவு விவகாரம் சரியாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக வெளியானதில் எவ்வித பின்னணியும் இல்லை.ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. ஆகையால் இதனை கூட்டத்தொடரோடு தொடர்புபடுத்திப் பார்க்கத் தேவையில்லை" என்று விளக்கினார்.

இன்று நாள் முழுவதுமே இரு அவைகளிலும் பெகாசஸ் உளவு மென்பொருள் சர்ச்சையே பிரதானமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலைச் சேர்ந்த என் எஸ் ஓ என்ற நிறுவனம் தயாரித்த ஸ்பைவேர் எனப்படும் உளவு மென்பொருள் தான் பெகாசஸ்.
இந்த, மென்பொருளை குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளை கண்காணிக்கும் நோக்கிலேயே தயாரித்துக் கொடுத்ததாக என்எஸ்ஓ நிறுவனம் கூறுகின்றது.

அதேவேளையில் இவற்றை உலகில் உள்ள பல நாடுகளின் உள்துறை, ராணுவ அமைச்சகங்களுக்காக தாங்கள் விற்பனை செய்துள்ளதாக்வும், ஆனால் விற்பனையோடு தங்களின் பணி முடிந்துவிடும் என்றும் அந்நிறுவனம் கூறுகின்றது. தங்கள் நிறுவன சர்வர்களில் எந்த ஒரு தகவலும் கசிய வாய்ப்பில்லை என்றும் அந்நிறுவனம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ஸ்பைவேரை விற்பனைக்குப் பின் அவற்றை வாங்கும் நாடுகள் எதற்காக அவற்றைப் பயன்படுத்துகின்றன என்பது பற்றி தாங்கள் அக்கறை கொண்டதில்லை என்றும் அந்நிறுவனம் கூறியிருக்கின்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x