Last Updated : 19 Jul, 2021 02:16 PM

 

Published : 19 Jul 2021 02:16 PM
Last Updated : 19 Jul 2021 02:16 PM

பெகாசஸ் உளவு விவகாரம்; பிரதமர் மோடி, அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல்

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் | கோப்புப்படம்

மும்பை

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

'தி வயர்' இணையதளம் வெளியிட்ட செய்தியின்படி, “ இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், நீதிபதி ஒருவர், மத்திய அமைச்சரவையில் இரு அமைச்சர்கள், பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருப்போர் எனப் பலருடைய செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன.

இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, நெட்வொர்க் 18, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய நாளேடுகளில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஏஎஃப்பி, சிஎன்என், தி நியூயார்க் டைம்ஸ், அல் ஜசிரா ஆகிய நாளேடுகளில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் செல்போன்களும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன.

பிரபலமான பத்திரிகையாளர்களான சித்தார்த் வரதராஜன், ஷிசிர் குப்தா, பிரஷாந்த் ஜா, ராகுல் சிங், சந்தீப் உன்னிதான், மனோஜ் குப்தா, விஜய்தா சிங், கோபிகிருஷ்ணன் உள்ளிட்டோரின் செல்போன்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதாகப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டு கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த விவகாரம் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

"இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதி என ஏராளமானோரின் செல்போன் எண்கள் உளவு பார்க்கப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த ஒட்டுகேட்பு விவகாரம் வெளியானது அரசின், நிர்வாகத்தின் பலவீனத்தைக் காட்டுகிறது. இதுபோன்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்து தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த விவகாரம் பற்றியும், மேலும் சில முக்கிய விவகாரங்கள் குறித்தும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயிடம் பேசியிருக்கிறேன். மகாராஷ்டிராவில் தொலைப்பேசி ஒட்டு கேட்பு குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா படேல் கேள்வி எழுப்பினார். அந்த விசாரணையில் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

ஆனால், இந்த விவகாரத்தில் நம்முடைய மக்களின் தொலைபேசி உரையாடல்கள், பத்திரிகையாளரின் பேச்சுகளை வெளிநாட்டு நிறுவனம் ஒட்டு கேட்டுள்ளது. இது மிகவும் தீவிரமானது. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை".

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

இதற்கிடையே மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களிடம் கூறுகையில், “பெகாசஸ் விவகாரத்தால் நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து மக்களவையில் எழுப்புவோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x