பெகாசஸ் உளவு விவகாரம்: மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்து விவாதம் நடத்த சிபிஐ எம்.பி. நோட்டீஸ்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி மாநிலங்களவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ எம்.பி. பினோய் விஸ்வம் சார்பில் அளிக்கப்பட்ட இந்த மனுவில், விதி 267-ன் கீழ் மாநிலங்களவை அலுவல்களை ரத்து செய்துவிட்டு, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதிவரை நடக்கிறது. இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பத்திரிகையாளர் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக வெளியான செய்தி, நாடாளுமன்றத்தில் பெரும்புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.

பிரான்ஸைச் சேர்ந்த லாபநோக்கமற்ற அமைப்பான ஃபர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டு கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர்.

'தி வயர்' இணையதளம் வெளியிட்ட செய்தியின்படி, “இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், நீதிபதி ஒருவர், மத்திய அமைச்சரவையில் இரு அமைச்சர்கள், பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருப்போர் என பலருடைய செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன.

இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, நெட்வொர்க் 18, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய நாளேடுகளில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஏஎஃப்பி, சிஎன்என், தி நியூயார்க் டைம்ஸ், அல் ஜசிரா ஆகிய நாளேடுகளில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் செல்போன்களும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன.

பிரபலமான பத்திரிகையாளர்களான சித்தார்த் வரதராஜன், ஷிசிர் குப்தா, பிரஷாந்த் ஜா, ராகுல் சிங், சந்தீப் உன்னிதான், மனோஜ் குப்தா, விஜய்தா சிங், கோபிகிருஷ்ணன் உள்ளிட்டோரின் செல்போன்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதாகப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரையும் உளவு பார்க்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய மின்னணு அமைச்சகத்துறை சார்பில் கூறுகையில், “குறிப்பிட்ட யாரையும் உளவு பார்க்கவில்லை, அவர்களின் செல்போனும் ஒட்டு கேட்கப்படவில்லை.

இதற்கு எந்தவிதமான அடிப்படையான வலுவான ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டு. வளமான ஜனநாயகத்தைக் கொண்ட இந்தியாவில், ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரின் தனிப்பட்ட உரிமையைப் பாதுகாக்க அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆதலால், ஆதாரமற்ற இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in