கர்நாடகாவில் ரூ.2 கோடி செலவில் சித்தி விநாயகர் கோயில் கட்டிய கிறிஸ்தவ தொழிலதிபர்

கர்நாடகாவில் ரூ.2 கோடி செலவில் சித்தி விநாயகர் கோயில் கட்டிய கிறிஸ்தவ தொழிலதிபர்
Updated on
1 min read

கர்நாடகாவைச் சேர்ந்த கிறிஸ்தவ தொழில‌திபர் காப்ரியேல் நசரேத், ரூ.2 கோடி செலவில் சித்தி விநாயகர் கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஷிர்வா கிராமத்தை சேர்ந்தவர் காப்ரியேல் நசரேத் (78). தொழிலதிபரான இவர்தனது மூதாதையரின் நிலத்தில் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.2 கோடி செலவில் சித்தி விநாயகர் கோயில் கட்டியுள்ளார். அதில் கடந்த மே 4-ம் தேதி 36 அங்குல விநாயகர் சிலையை நிறுவினார். இந்து கடவுள்களின் படங்களுடன் குழந்தை இயேசு, மேரி மாதா, புனித அந்தோணியார் உள்ளிட்ட கிறிஸ்தவ கத்தோலிக்க கடவுளின் படங்களையும் வைத்துள்ளார்.

இதுகுறித்து காப்ரியேல் நசரேத் கூறும்போது, ‘‘நான் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வேலை தேடி மும்பைக்கு சென்றேன். அங்கு சில ஆண்டுகள் வேலை செய்த பின்னர், சொந்தமாக கட்டுமான தொழில் தொடங்கினேன். மும்பையில் எனது நண்பர்கள் பெரும்பாலும் சித்தி விநாயகரின் பக்தர்களாக இருந்ததால், நானும் அவரது பக்தர் ஆனேன். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் ஆண்டுதோறும் சித்தி விநாயகருக்கு பூஜை செய்து வணங்கினேன்.

10 ஆண்டுகளுக்கு முன் எனது சொந்த ஊருக்கு திரும்பிவிட்டதால், இங்கு என் பெற்றோரின் நினைவாக சித்தி விநாயகர் கோயில் கட்ட முடிவெடுத்தேன். என் வாழ்வில் நான் இந்த அளவுக்கு முன்னேறியதில் இயேசுகிறிஸ்துவைப் போல சித்தி விநாயகருக்கும் பங்கு இருக்கிறது. அதற்கான நன்றிக் கடனாக என் வீட்டுக்கு பக்கத்திலேயே ரூ.2 கோடி செலவில் இந்த கோயிலை கட்டியுள்ளேன். கடந்த பிப்ரவரி மாதத்தில் கட்டுமான பணிகள் நிறைவடைந்தன. கரோனா ஊரடங்கின் காரணமாக கோயில் திறப்புவிழா அப்போது நடத்த முடியவில்லை. தற்போது ஊரடங்குகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள் ளதால், கடந்த 15-ம் தேதி சிறப்பு பூஜை செய்து கோயில் திறக்கப்பட்டது''என்றார்.

இந்த முயற்சி மத நல்லிணக்கத்துக்கு வழிவகை செய்வதாகஅவரை பலரும் பாராட்டியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in