Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்; நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.படம்: பிடிஐ

புதுடெல்லி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

டெல்லியில் நேற்று நடைபெற்றஅனைத்துக் கட்சி கூட்டத்தின்போது, எல்லா விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

வழக்கமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை3-வது வாரத்தில் தொடங்கி ஆகஸ்ட்மாதத்தில் சுதந்திர தின விழாவுக்கு முன்பாக நிறைவடையும். இதன்படி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி நிறைவடைய உள்ளது.

முக்கிய மசோதாக்கள்

கடந்த ஆண்டில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநிலங்களவை காலையிலும் மக்களவை பிற்பகலிலும் நடத்தப்பட்டன. தற்போது வைரஸ் பரவல் குறைந்திருப்பதால் இரு அவைகளும் காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மக்களவை, மாநிலங்களவையில் சமூக இடைவெளியை பின்பற்ற இருக்கைகள் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளன. மக்களவையில் தற்போதுள்ள 539 எம்.பி.க்களில் 280 பேர் வழக்கமான இருக்கைகளிலும் 259 பேர் பார்வையாளர் மாடத்திலும் அமர வைக்கப்பட உள்ளனர். இந்த கூட்டத் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இதுவரை 400-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கும், 200 அலுவலர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மழைக்கால கூட்டத் தொடரில் மீன் வள மசோதா, மின்சார திருத்த மசோதா, மரபணு தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா, பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்புமசோதா, வாடகை தாய் ஒழுங்குமுறை மசோதா, மத்திய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா, தீர்ப்பாய திருத்த மசோதா உள்ளிட்ட 29 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தச் சூழலில் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மத்தியஅரசு சார்பில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அர்ஜுன் ராம் மேக்வால், பிரகலாத் ஜோஷி, பியூஷ் கோயல், முரளிதரண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ்சார்பில் அதன் மூத்த தலைவர்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மல்லிகார்ஜுன கார்கே, திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த டெரக் ஓ பிரைன், சுதிப்பண்டோபாத்யாயா, திமுகவை சேர்ந்த டி.ஆர். பாலு, திருச்சி சிவா,சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால்யாதவ் உட்பட 33 கட்சிகளை சேர்ந்த40 பேர் கலந்து கொண்டனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல்விலை உயர்வு, நீட் தேர்வு விவகாரம், புதிய வேளாண் சட்டங்கள், கரோனா வைரஸ் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடிபதில் அளித்தபோது, "அனைத்துவிவகாரங்கள் குறித்தும் விதிகளுக்கு உட்பட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார். ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்த வேண்டும்.நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புவழங்க வேண்டும். எதிர்க்கட்சிகள்ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கலாம்" என்று தெரிவித்தார்.

அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும்போது, "நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார்" என்று தெரிவித்தார்.

மக்களவைத் தலைவர் ஆலோசனை

இதைத் தொடர்ந்து மக்களவை தலைவர் ஓம் பிர்லா, அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்க அவர் கேட்டுக் கொண்டார்.

குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடு நேற்று முன்தினம் கூறும்போது, "கரோனா காலத்தில் அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களும் மக்களுக்காக செயல்பட வேண்டும். மக்களின் நலன் கருதிமாநிலங்களவையில் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

எதிர்க்கட்சிகளின் வியூகம்

கரோனா வைரஸ், விலைவாசி உயர்வு, வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பொதுவான பிரச்சினைகளை தாண்டி மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மத்திய அமைச்சரவை அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது புதிதாக கூட்டுறவு துறை உருவாக்கப்பட்டு, அந்த துறையின் பொறுப்பு அமித் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. மத்திய அரசு கூட்டுறவுத் துறையை உருவாக்கியிருப்பது மாநில அரசின்அதிகாரத்தை பறிக்கும் செயல்என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சிகள், பிராந்திய கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்ப திட்டமிட்டுள்ளன.

மேலும் உத்தர பிரதேச அரசுஅறிமுகம் செய்துள்ள மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா, சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமியின் மரணம், தேசதுரோக வழக்குகுறித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்படும் என்று தெரிகிறது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம், சிவசேனா, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இரு அவைகளிலும் கடும் அமளியை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x