

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு அறிவித்தி ருப்பதை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் கோரியுள்ளது.
பக்ரீத் பண்டிகை 21-ம் தேதி வருவதை முன்னிட்டு கேரள அரசு 18, 19 மற்றும் 20-ம் தேதிகளில் கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த மூன்று நாட்களில் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை திறந்திருக்கலாம் என்று அறிவித்துள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிரா விலும் கேரளாவிலும்தான் தொடர்ந்து தினசரி கரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா 3-வது அலை தாக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், கேரள அரசு பக்ரீத் பண்டிகைக்காக ஊரடங்கில் தளர்வு அறிவித்திருப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தளர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றம் செல்ல நேரிடும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருத் துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேரளாவில் கரோனா தொற்று அதிகமாக இருக்கும் நிலையில், பக்ரீத்துக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வை கேரளா அரசு அறிவித்திருப்பது கவலை யளிக்கிறது. இது தேவையற்றதும் பொருத்தமற்றதும் ஆகும். உத்தர பிரதேசம், உத்தராகண்ட் போன்ற வட மாநிலங்களும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புனித யாத்திரைகளை ரத்து செய்துள்ளன.
இந்நிலையில், கல்வியறிவு மிக்க கேரள மாநிலம் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு வழி செய்யும் இதுபோன்ற முடிவை எடுத்திருப்பது துரதிர்ஷ்ட வசமானது.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் தனது சட்டப்பூர்வமான கடமையில் இருந்து கேரள அரசு விலகக் கூடாது. கரோனா தொற்றை தடுக்க விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இல்லா விட்டால் நாங்கள் உச்ச நீதிமன்றம் செல்லும் கட்டாய நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே, கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டதை கேரள அரசு திரும்பப் பெற்று கரோனாவை தடுப்பதில் முன்மாதிரி மாநிலமாக விளங்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் மருத்துவ சங்கம் கூறியுள்ளது.