Last Updated : 19 Jul, 2021 03:12 AM

 

Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM

விதி மீறி ஃபக்கீர் ராம் கோயிலை விலைக்கு வாங்கியதாக வழக்கு: ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு அயோத்தி மாவட்ட நீதிமன்றம் நோட்டீஸ்

அயோத்தியில் விதிகளுக்கு புறம் பாக ஃபக்கீர் ராம் கோயிலை அதன் மடத்துடன் சேர்த்து வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், ராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக் கட்டளைக்கு அயோத்தி மாவட்ட சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பக் ராய், ராமர் கோயிலுக்கு அயோத்தியின் பல இடங்களிலும் நிலங்களை வாங்கி வருகிறார். இதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் கிளம்பியுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலுக்கு எதிரில் உள்ள ராம் கோட் பகுதியில் ஃபக்கீர் ராம் எனும் பெயரில் மடத்துடன் அமைந்த ஒரு கோயில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோயிலை சமீபத்தில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையினர் விலைக்கு பெற்றனர். இதில், ஃபக்கீர் ராம் கோயில் மற்றும் மடத்துக்கு அயோத்தியில் மாற்று இடமும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஒப்பந்தம் செல்லாது எனவும், இது ஃபக்கீர் ராம் கோயில் அறக்கட்டளை விதிகளுக்கு புறம்பானது எனவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ராமஜென்ம பூமி அறக்கட்டளையினர் மீது அயோத்தி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அயோத்தியை சேர்ந்த சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த், சிவசேனா மாநிலத் தலைவர் சந்தோஷ் துபே ஆகியோர் தொடர்ந்துள்ளனர். இவர்களது மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சஞ்சீவ் திரிபாதி, ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பக் ராய்க்கு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பழமையான மடங்களில் ஒன்றான ஃபக்கீர் ராம் மடத்தின் தலைவராக மஹந்த் ராஜ்கிஷோர் சரண் என்பவர் இருந்தார். இவரால் வகுக்கப்பட்ட அறக்கட்டளை விதிகளின்படி ஃபக்கீர் ராம் கோயிலையும் அதன் மடத்தையும் விற்க முடியாது. இக்கோயிலில் ஆரத்தி மற்றும் பூஜைகள் அதே இடத்தில் தடைபடாமல் நடைபெற வேண்டும் எனவும் விதி உள்ளது. இந்நிலையில் மஹந்த் ராஜ்கிஷோர் சரண் சமீபத்தில் இறந்த பிறகு, கிருபா சங்கர் தாஸ், ராம் கிஷோர் சிங் என்ற இருவர் அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகளாக தாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தனர். ஆனால் இதை அவிமுக்தேஷ்வராணந்த் தரப்பினர் ஏற்கவில்லை.

மஹந்த் ராஜ் கிஷோர் தாஸுக்கு பதிலாக மேற்கண்ட இருவரின் பெயர்கள், கடந்த மார்ச் 26-ல் உ.பி. அரசு பதிவேட்டில் பதிவானது. இதன் மறுநாளே இந்த மடத்துடன் கோயிலும் ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவும் நீதிமன்ற மனுவில் புகாராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஃபக்கீர் ராம் கோயில் அறக்கட்டளையின் நிர்வாகிகளான கிருபா சங்கர் தாஸ், ராம் கிஷோர் சிங் ஆகியோருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x