

கரோனாவின் தாக்கமாகப் பக்ரீத் பண்டிகையில் ஆடுகளின் விலை 30 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன. இதன் காரணமாக ஆடுகள் ரூ.2.5 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
இந்த வருடம் பக்ரீத் பண்டிகை ஜுலை 21 இல் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு வருடம் பக்ரீத் பண்டிகைக்காக குர்பானி எனும் பலியை முஸ்லிம்கள் கொடுப்பது வழக்கம்.
இதற்காக, டெல்லியின் பெரும்பாலானவர்களின் வீடுகளில் ஆடுகள் வாங்கப்படுகின்றன. இதற்கான சந்தை பழைய டெல்லி பகுதியின் ஜாமியா மசூதி அருகில் கூடுகிறது.
இதில், கரோனா காரணமாக இந்த வருடம் ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. டெல்லியை சுற்றியுள்ள வெளிமாநிலங்களின் வியாபாரிகள் தங்கள் ஆடுகளை விற்க இந்த வருடம் சந்தைக்கு வரவில்லை.
இதனால், அதன் விலை சுமார் 30 சதவிகிதம் உயர்ந்துள்ளன. இதுபோன்ற சூழலில், பல முஸ்லிம்கள் இந்த வருடம் குர்பானி அளிக்க முன்வரவில்லை.
இவர்கள் ஏற்கனவே கரோனாவினால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. எனினும், அதிக விலையாக ரூ.2.5 லட்சம் வரையில் விற்பனை செய்யும் ஆடுகளை வாங்குபவர்களும் உண்டு.
இந்த வருடம் பக்ரீத்தின் குர்பானிக்காக ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆடு வாங்கி குர்பானி அளிக்கவும் தயாராகி வருகின்றனர்.
இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் டெல்லி சந்தையில் 18 வருடங்களாக வரும் வியாபாரியான ஹமீத் குரைஷி கூறும்போது, "ஒவ்வொரு வருடம் போல் அன்றி இந்த வருடம் ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலிருந்து மட்டும் ஆடுகள் வந்துள்ளன.
ரூ.50 அல்லது 60 ஆயிரத்திற்கு விற்பனையான ஆடுகள் இந்தமுறை ரூ.90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்கின்றன" எனத் தெரிவித்தார்.
ராஜஸ்தானின் அஜ்மீர் இனத்தை சேர்ந்த ஆடுகள் அதிக விலையில் விற்கப்படுகின்றன. ஹரியானின் மேவாத்தி மற்றும் பரோட் பாரி இன ஆடுகளும் அதிக விலையில் உள்ளன.
இந்த உயர்ந்த இனங்களின் ஆடுகளின் குறைந்தபட்ச விலை ரூ.1 லட்சம் ஆகும். இவைகளுக்கு அதன் வியாபாரிகள் பாலிவுட் படங்களின் நாயகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை வைத்து விற்பதும் வியப்பானதாக உள்ளது.