

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் எம்எச்-60ஆர் ரக 2 ஹெலிகாப்டர்களை அந்நாட்டு கடற்படையிடமிருந்து இந்திய கடற்படை பெற்றுக் கொண்டது.
அமெரிக்காவும் இந்தியாவும் பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையி்ல, வெளிநாட்டு ராணுவ கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் எம்எச்-60ஆர் ரகஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்க அரசுடன் இந்திய கடற்படை ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த ஹெலிகாப்டர்கள் அனைத்து காலநிலையிலும் பறக்கும் வகையில் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கடற்படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
அமெரிக்காவிடமிருந்து 24 ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 2 ஹெலிகாப்டர்களை அமெரிக்க கடற்படை இந்திய கடற்படையிடம் முறைப்படி ஒப்படைத்துள்ளது. அமெரிக்காவின் சான் டியாகோவில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் 16-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சாந்து ஹெலிகாப்டர்களை ஏற்றுக் கொண்டார்.
அந்த ஹெலிகாப்டர்களில் இந்திய கடற்படைக்குத் தேவையானபடி சில சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் பொருத்தப்படும். இந்த ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கான பயிற்சி இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஹெலிகாப்டர்களின் வருகையால் இந்திய கடற்படையின் முப்பரிமாண திறன் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். - பிடிஐ