Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

கேரளாவில் வரதட்சணையாக மணப்பெண்ணுக்கு அளிக்கப்பட்ட 50 பவுன் நகையை திருப்பிக் கொடுத்த மணமகன்

வரதட்சணையாக அளிக்கப்பட்ட நகைகளை மணமேடையிலேயே பெண் வீட்டாரிடம் மணமகன் திருப்பிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் சமீப காலமாக வரதட்சணை கொடுமைகள் தலைதூக்கி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் விஸ்மயா வரதட்சணைக் கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கு கடந்த 5 ஆண்டுகளில் வரதட்சணைக் கொடுமையால் 66 இளம்பெண்கள் உயிர் இழந்துள்ளனர்.

கேரளாவில் வரதட்சணைக் கொடுமை சமூகப் பிரச்சினையாக உருவாகியிருப்பதால் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். ஆளுநர்ஒருவர் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் உண்ணாவிரதம் இருந்தது தென்னிந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும்.

இந்நிலையில், இளைஞர் ஒருவர் செய்த செயல் சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் சத்யன். இவரது மகன் சதீஷ் சத்யனுக்கும் (28), அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகள் ஸ்ருதிக்கும் (21) கடந்த மே 13-ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.

கரோனா 2-வது அலையின்போது அமல் செய்யப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ஆலப்புழாவில் திருமணம் நடைபெற்றது.

மணமகன் சதீஷ், சின்ன வயதில் இருந்தே வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யும் கொள்கைப் பிடிப்போடு இருந்தார். அதன்படி தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதுமே வரதட்சணை வேண்டாம் என பெண் வீட்டாரிடம் தெரிவித்திருந்தார். ஆனாலும் மணமகள் வீட்டில் இருந்து 50 பவுன் நகை போட்டு திருமணம் செய்து வைத்தனர்.

மணமகன் சதீஷ், மணமகள் ஸ்ருதியின் கழுத்தில் தாலி கட்டியதுமே மணப்பெண்ணின் கழுத்தில் இருந்த திருமாங்கல்யம், 2 கைகளிலும் தலா ஒரு வளையல் போக மீதமிருக்கும் நகைகளை மணமகளின் பெற்றோரிடமே கொடுக்கச் சொன்னார். இதன்படி, ஸ்ருதியும் நகைகளை தனது பெற்றோரிடம் திருப்பிக் கொடுத்தார்.

மணமகன் சதீஷ் நாதஸ்வர கலைஞராக உள்ளார். கோயில் திருவிழாக்கள், திருமண முகூர்த் தங்களில் மட்டுமே தொழில் வாய்ப்பு பெறும் சதீஷின் இந்த செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x