Last Updated : 18 Jul, 2021 03:14 AM

 

Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

மேகேதாட்டுவில் அணை கட்டுவது உறுதி: பிரதமரை சந்தித்த பிறகு முதல்வர் எடியூரப்பா தகவல்

புதுடெல்லி / பெங்களூரு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவது உறுதி என கர்நாடக முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு ரூ. 9 ஆயிரம் கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக அரசின் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளது. மேலும் மேகேதாட்டு திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அவசரமாக டெல்லி சென்ற கர்நாடக முதல்வர் எடியூரப்பா அன்றிரவு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். மறுநாள் டெல்லியில் முகாமிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

பின்னர் கர்நாடக பவனில் செய்தியாளர்களிடம் எடியூரப்பா கூறியதாவது:

மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்டுவதால் தமிழக விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்த திட்டத்தால் கர்நாடகா, தமிழகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் நன்மையே ஏற்படும். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன். ஆனாலும் மேகேதாட்டு திட்டத்தை எதிர்ப்பதில் தமிழகம் பிடிவாதமாக உள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பில் கர்நாடகாவுக்கு வழங்க‌ப்பட்ட நீரில் புதிய திட்டங்களை செயல்படுத்த எங்களுக்கு முழு உரிமை உள்ளது. இதுகுறித்து காவிரி நீர் தொடர்புடைய ஆணையங்களுடன் ஆலோசித்தே இந்த திட்டத்தை தீட்டினோம். சட்டரீதியாகவும் கர்நாடகாவுக்கு சாதகமாக அம்சங்கள் உள்ளன. இருப்பினும் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் எதிர்க்கின்றன. தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடியிடம் மேகே தாட்டு திட்டத்துக்கு அனுமதி வழங்கு மாறு கோரிக்கை விடுத்தேன். ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகா வத்திடம் இந்த திட்டம் தொடர்பாக விரிவாக விளக்கினேன். இருவரும் எனது கோரிக்கையை நிதானமாக கேட்டறிந்து, நேர்மறையான பதிலை அளித்தார்கள். எனவே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவது 100 சதவீதம் உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை. விரைவில் அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.

‘பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை’

கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது மகன் விஜயேந்திராவுடன் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், அவரை முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு பாஜக மேலிடம் உத்தரவிட்டதாக நேற்று தகவல் பரவியது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, எடியூரப்பா சந்தித்து பேசினார்.

பின்னர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘என்னை யாரும் முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு உத்தரவிடவில்லை. நான் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திகளில் துளியும் உண்மை இல்லை. பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா உள்ளிட்டோருடன் கர்நாடகாவின் வளர்ச்சி தொடர்பாகவே பேசினேன். நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. மீதமுள்ள ஆண்டுகளுக்கும் நானே முதல்வராக தொடர்வேன். முதல்வர் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை. 2023-ம் ஆண்டு நடக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற உழைக்குமாறு ஜே.பி.நட்டா அறிவுரை வழங்கினார். நான் கடுமையாக உழைத்து கட்சியை வலுப்படுத்தி 2023 தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைக்கும் என உறுதி அளித்தேன்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x