

தெலங்கானாவில் கரோனா இரண்டாவது அலை தொடங்கியதில் இருந்தே தெலுங்கு திரையுலகம் முடங்கியுள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தெலுங்கு ஃபிலிம் சேம்பர் நிர்வாகிகள் நேற்று மாநில திரைப்படத் துறை அமைச்சர் தலசானி நிவாச யாதவை சந்தித்துப் பேசினர். அப்போது, “ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும். திரையரங்குகள் திறக்கப்படாததால் புதிய படங்கள் ஓடிடியில் வெளியிடப்படுகின்றன. இந்த வழக்கம் தொடர்ந்தால் திரையரங்குகளை நிரந்தரமாக மூடவேண்டிய நிலை ஏற்படும். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தனர்.
மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளதால் மின் கட்டண சலுகை, கேளிக்கை வரி ரத்து போன்ற கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.