

கர்நாடகாவில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோல, கபிலா ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதிகளில் மழை பெய்வதால் கபிலா ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் காவிரி, கபிலா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கியுள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 2282.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 17 ஆயிரத்து 859 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 15 ஆயிரத்து 488 கனஅடி நீர் திறந்துவிடப் பட்டுள்ளது. இதே அளவுக்கு நீர்வரத்து தொடர்ந்தால் கபினி அணை ஓரிரு தினங்களில் முழு கொள்ளளவை எட்டிவிடும்.
கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் மைசூரு, மண்டியா மாவட்ட பாசனத்துக்காக திறக்கப் பட்டுள்ளது. தமிழகத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.