

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி தொடர்பாக அப்பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்ய குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி நிறுவனர்களில் ஒருவரான மக்பூல் பட், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கில் இடப்பட்ட அப்சல் குரு ஆகியோரின் மறைவுக்கு துயரம் அனுசரிக்கும் நிகழ்ச்சி ஜேஎன்யூ வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது.
ஜேஎன்யூ நிர்வாகத்தின் எதிர்ப்பை மீறி மாணவர்களில் ஒரு பிரிவினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாஜக எம்.பி. மகேஷ் கிரி மற்றும் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத மாணவர்களுக்கு எதிராக டெல்லி வசந்த் குஞ்ச் (வடக்கு) காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 124ஏ (தேசத்துரோகச் செயல்), 120பி (குற்றச் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜேன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்னய்ய குமார் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
சிவில் உடையில் வந்த 2 போலீஸார், கன்னய்ய குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடதுசாரிகள் கவலை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அணி (ஏஐஎஸ்எப்) உறுப்பினராகவும் கன்னய்ய குமார் இருந்து வருகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தேசிய செயலாளர் டி.ராஜா விடுத்துள்ள அறிக்கையில், “ஜேஎன்யூ வளாகத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதை கண்டிக்கிறோம். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை ஆதரிக்கிறோம். ஆனால் இந்த சக்திகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அனைத்து இடதுசாரி மாணவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக குறிவைக்க கூடாது” என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும் இது தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார்.