

அயோத்தியில் விதிகளுக்கு முரணாக ஃபக்கீர் ராம் கோயிலை அதன் மடத்துடன் சேர்த்து வாங்கியதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதை விசாரிக்க, அம்மாவட்ட சிவில் நீதிமன்றம் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையினருக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு சார்பில் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பொதுச்செயலாளரான சம்பக் ராய், ராமர் கோயில் கட்டுவதற்காக அயோத்தியின் பல பகுதிகளில் நிலங்களை விலைக்கு வாங்கி வருகிறார். பொதுமக்களின் நன்கொடையில் வாங்கப்படும் இந்த நிலங்களின் சிலவற்றில் சமீப நாட்களாக ஊழல் புகார் கிளம்பியுள்ளது.
இந்தவகையில், அயோத்தியின் ராமர் கோயிலுக்கு எதிரில் உள்ள ராம் கோட் பகுதியில் ஃபக்கீர் ராம் எனும் பெயரில் மடத்துடன் அமைந்த ஒரு கோயில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோயிலை அதன் மடத்துடன் சேர்த்து சமீபத்தில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையினர் விலைக்கு பெற்றனர்.
இதில், ஃபக்கீர் ராம் கோயில் மற்றும் மடத்திற்காக அயோத்தியில் ஒரு மாற்று இடமும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் செல்லாது எனவும், இது ஃபக்கீர் ராம் கோயில் அறக்கட்டளையின் விதிகளுக்கு முரணாக வாங்கப்பட்டிருப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
இதன் மீது அயோத்தியின் சிவில் நீதிமன்றத்தில் அக்கோயிலை விலைக்கு பெற்ற ராமஜென்ம அறக்கட்டளையினர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை சுவாமி அவிமுக்தேஷ்வராணந்த் மற்றும்
சிவசேனாவின் உ.பி. மாநில தலைவர் சந்தோஷ் துபே தொடுத்துள்ளனர்.
இவர்களது மனு ஏற்கப்பட்டு மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் திரிபாதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், நீதிபதி திரிபாதி, ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பக் ராய்க்கு பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
அயோத்தியின் பழமையான கோயில்களில் ஒன்றான ஃபக்கீர் ராம் மடத்தின் தலைவராக மஹந்த் ராஜ்கிஷோர் சரண் இருந்தார். இவரால் வகுக்கப்பட்ட அறக்கட்டளை விதிகளின்படி ஃபக்கீர் ராம் கோயிலையும் அதன் மடத்தையும் விற்க முடியாது.
இக்கோயிலில் ஆர்த்தி, பூஜை புனஸ்காரங்களும் அதே இடத்தில் தடைபடாமல் நடைபெற வேண்டும் என உள்ளது. மஹந்த் ராஜ்கிஷோர் சரண் சமீபத்தில் இறந்துவிட அந்த அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகளாக கிருபா சங்கர் தாஸ் மற்றும் ராம் கிஷோர் சிங் தேர்வானதாக அறிவித்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மஹந்த் ராஜ் கிஷோர் தாஸுக்கு பதிலாக இந்த இருவரது பெயர்கள், கடந்த மார்ச் 26 இல் உ.பி. அரசு பதிவேட்டில் பதிவானது. இதன் மறுதினமே இந்த மடத்துடன் கோயிலையும், ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மீதானப் புகாரும் சிவில் நீதிமன்றத்தின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஃபக்கீர் ராம் கோயில் அறக்கட்டளையின் நிர்வாகிகளான கிருபா சங்கர் தாஸ் மற்றும் ராம் கிஷோர் சிங் ஆகியோருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.