Published : 17 Jul 2021 03:12 AM
Last Updated : 17 Jul 2021 03:12 AM

ஹரியாணா மாநிலத்தில் நாட்டின் முதல் உணவு தானிய ஏடிஎம்

குருகிராம்

நாட்டிலேயே முதன்முறையாக உணவு தானியங்களை வழங்கும் தானியங்கி ஏடிஎம் இயந்திரத்தை ஹரியாணா மாநில அரசு குருகிராமில் நிறுவியுள்ளது.

நியாய விலை கடைகளில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதைத் தவிர்க்கவும், சரியான அளவில் உணவு தானியங்கள் வழங்கவும் தானியங்கி இயந்திரம் மூலம் உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை ஹரியாணா அரசு முன்னெடுத்துள்ளது.

இந்த தானியங்கி உணவு தானிய விநியோக இயந்திரம் அமைக்கும் திட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் ‘உலகளாவிய உணவு திட்டத்தின்’ கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனை முயற்சியாக குருகிராமில் உள்ள ஃபாருக்நகர் நியாய விலைக் கடையில் ‘அன்னபூர்த்தி’ என்ற தானியங்கி உணவு தானிய ஏடிஎம் இயந் திரத்தை நிறுவியுள்ளது.

இதுகுறித்து ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கூறும்போது, ‘‘நாட்டின்முதல் உணவு தானிய ஏடிஎம் நிறுவியிருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த பைலட் திட்டம் வெற்றிகரமாகும்பட்சத்தில் மாநிலம் முழுவதும் இந்த இயந்திரங்களை அமைக்க உள் ளோம். இதன்மூலம் பயனாளிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. நேர விரயம் தவிர்க்கப்படும். பொருள் வழங்கலும் எளிமைப்படுத்தப்படும். சரியான அளவில் மக்களுக்கு உணவு தானியங்கள் சென்று சேரும். இத்திட்டத்தினால் பல லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்’’ என்றார்.

இந்த உணவு தானிய ஏடிஎம் இயந்திரமானது 5-7 நிமிடங்களில் 70 கிலோ வரையிலான தானியங்களை வழங்கக்கூடியதாக உள்ளது. வங்கி ஏடிஎம் முறையிலேயே செயல்படும் இந்த உணவு தானிய ஏடிஎம் இயந் திரத்தில் வழங்கப்படும் தானிய அளவுகளில் குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம் தொடுதிரை மற்றும் கைரேகை பதிவு வசதி களுடன் இருப்பதால் பயனாளிகள் ஸ்மார்ட் கார்டு மூலமாகவோ, ஆதார் எண் பதிவு மூலமாகவோ இந்த இயந்திரத்தில் உணவு தானியங்களைப் பெற முடியும்.

இத்திட்டத்துக்குப் பரவலாக மக்களிடையே வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. அக்‌ஷயபாத்ரா அறக்கட்டளை இத்திட்டத்தைப் பாராட்டி, இத்திட்டம் பெரிய அளவில் வெற்றியடையவும், இதன்மூலம் பலதரப்பட்ட மக்கள் பயனடையவும் வாழ்த்துக்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x