

திருப்பதி வனத்துறை அதிகாரிகள் கொலை வழக்கில் வரும் 24-ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது. இதுதொடர்பாக, ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக தொழிலாளர்கள் விடுதலை ஆவார்களா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில், கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி செம்மர கடத்தலை தடுக்க முயன்ற வனத்துறை அதிகாரிகளான ஸ்ரீதர், டேவிட் ஆகிய இருவரும் மரம் வெட்டும் தொழிலாளர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 435 பேர் மீது ரேணிகுண்டா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் திருப்பதி, ரேணிகுண்டா, நகரி, புத்தூர் ஆகிய பஸ், ரயில் நிலையங்களில் மொத்தம் 356 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் 79 பேர் தலைமறைவாக உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் திருப்பதி, பீலேர், ஸ்ரீகாளஹஸ்தி சிறைகளில் கடந்த 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டனர்.
ஆந்திர சிறையில் அடைக்கப்பட்ட தமிழக கூலி தொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதினார். மேலும் இவர்களை ஜாமீனில் எடுக்க தமிழக அரசு வழக்கறிஞர்கள் குழுவை நியமித்தது. இவர்கள் சிறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலரை ஜாமீனில் வெளியே எடுத்தனர். 3 பேர் விசாரணை காலத்திலேயே உயிரிழந்தனர். இப்போது திருப்பதி (139), பீலேர் (90), ஸ்ரீகாளஹஸ்தி (58) ஆகிய சிறைகளில் மொத்தம் 287 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வரும் 24-ம் தேதி இதன் தீர்ப்பு திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசா விளையாட்டு மைதானத்தில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் 2 பேரை, சுமார் 400-க்கும் மேற்பட்டோர் அடித்துக் கொன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சில வழக்கறிஞர்களிடம் கேட்டபோது, “400 பேர் சேர்ந்து அடித்துக் கொன்றால் அது கொலை வழக்குக்கு பலம் சேர்க்காது. இதனால் அனைவரும் விடுதலை செய்யப்படலாம். அல்லது சாட்சிகளின் அடிப்படையில், 10-லிருந்து 20 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மற்றவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படலாம்” என்றனர்.