

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பான தங்களது நிலைப்பாட்டை இன்று நேரில் சந்தித்து தெரிவிக்குமாறு மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவருக்கும் பாஜக மாநில தலைவருக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிடிபி தலைவர் மெகபூபாவுக்கும் பாஜக மாநில தலைவர் சத் பால் சர்மாவுக்கும் ஆளுநர் என்.என்.வோரா நேற்று முன்தினம் மாலை பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.
பாஜகவுடன் இணைந்து மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு மெகபூபா நிபந்தனை விதித்துள்ள தால், புதிதாக தேர்தல் நடத்தப் படுவதைத் தவிர்க்கும் வகையில் இருதரப்பையும் சமாதானப்படுத்து வதற்காக இந்தக் கடிதம் எழுதப் பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக இரு தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி இன்று மதியம் மெகபூபா முப்தி ஆளுநர் வோராவை சந்தித்துப் பேச உள் ளார். அதன் பிறகு மாலை 6 மணிக்கு பாஜக மாநில தலைவர் சத் பால் சர்மாவும் ஆளுநரை சந்திக்கிறார்.
ஆளுநர் அழைப்பு விடுத்ததை யடுத்து, பிடிபி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மெகபூபா தலைமையில் நடை பெற்ற இந்தக் கூட்டத்தில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து எத் தகைய நிலையை எடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பான கட்சியின் நிலைப் பாட்டை ஆளுநரிடம் தெரிவிக்க கட்சித் தலைவர் மெகபூபாவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இதுபோல, பாஜகவின் முக்கிய தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மெகபூபாவின் நிபந்தனை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கட்சியின் மாநில தலைவர் சத் பால் சர்மா கூறும்போது, “காஷ்மீரில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசித்தோம். மேலும் 2 அல்லது 3 உறுப்பினர்கள் டெல்லிக்கு சென்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்துவதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி-பாஜக கூட்டணி அரசின் முதல்வராக இருந்த முப்தி முகமது சையது உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 7-ம் தேதி காலமானார். இதையடுத்து புதிய அரசு அமைவதில் தாமதம் ஏற்பட்டதால் அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 3 வாரங்கள் கடந்த பிறகும் புதிய ஆட்சி அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.