

கன்வர் யாத்திரைக்கு அனுமதி தருவதை உத்தர பிரதேச அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-வது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
கரோனா தடுப்பு வழிமுறைகளான சமூக விலகல், முகக்கவசம், தடுப்பூசிசெலுத்துதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்றாவிட்டால், 3-வது அலை விரைவாக வருவது சாத்தியம் என்று ஏற்கெனவே மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஐஎம்ஏ என அழைக்கப்படும் மருத்துவர் சங்கமும் கரோனா 3-வது அலை தொடர்பாக எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்தநிலையில் இந்த ஆண்டு கன்வர் யாத்திரை நடத்த உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
கன்வர் யாத்திரை என்பது பல பகுதிகளில் இருந்து ஹரித்துவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் ஆண்டுதோறும் பாத யாத்திரயைாக செல்வது வழக்கம்.
கன்வர் யாத்திரையை இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் கன்வர் யாத்திரை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு விசராணையின்போது மத்திய அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் கன்வர் யாத்திரை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வழிபாடு நடத்த அனுமதிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
கரோனா காலத்தில் கன்வர் யாத்திரையை அனுமதிக்க கோருவதை ஏற்க முடியாது. கன்வர் யாத்திரைக்கு அனுமதி தருவதை உத்தர பிரதேச அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
உத்தர பிரதேச அரசு இந்த ஆண்டு கன்வர் யாத்திரை நடத்த அனுமதித்துள்ளதா என்பதை விளக்க வேண்டும். அதன் பிறகு நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம். நலமுடன் வாழ்வதற்கு தேவையானவற்றை செய்ய வேண்டியது அரசுகளின் கடமை. இது இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமை. இதனை புரிந்து செயல்பட வேண்டும்.
கரோனா 3-வது அலையை தடுக்க மக்கள் கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கரோனா விதிமுறை மீறலை நாம் ஒரு சதவீதம் கூட அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினர்.