

கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது.மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. அதேநேரத்தில் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.
சில மாநிலங்களில் மட்டும் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மிசோரம், ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலங்களுக்கு மத்தியக் குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பி வைத்தது.
தலா 2 பேர் கொண்ட இந்தக் குழுவில் மருத்துவர், பொது சுகாதார நிபுணர் இடம் பெற்றிருந்தனர். கரோனா பரிசோதனை, சிகிச்சை முறைகள், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்தக் குழு ஆய்வு செய்தது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இருப்பு, ஆம்புலன்ஸ், வென்டிலேட்டர், மருத்துவ ஆக்ஸிஜன் இருப்பு குறித்து இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.
மாநில அரசுக்கு தேவையான அறிவுரைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளையும் இந்தக் குழுவினர் வழங்கினர்.
இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதன்படி வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலாயா, அருணாச்சல பிரதேசம், மிசோரம் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அண்மையில் ஆய்வு செய்தார்.
அந்த மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர்களுக்கு தேவையான ஆலோசனைகளை பிரதமர் மோடி வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளி்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.