

இந்தியாவில் இதுவரை 39 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதலாக பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில், கரோனா முன்களப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. பின்னர், படிப்படியாக அனைத்து தரப்பினருக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 39 கோடியே 10 லட்சத்து 53 ஆயிரத்து 156 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அன்றைய தினத்தில் மட்டும் 32.10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.
இதுவரை அதிகபட்சமாக, தமிழகம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, பிஹார், குஜராத் ஆகிய 8 மாநிலங்களில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களில் சுமார் 50 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 40.31 கோடி கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இன்னும்83.85 லட்சம் தடுப்பூசிகள் விரைவில்வழங்கப்படவுள்ளன. இது ஒருபுறம் இருக்க, பல்வேறு மாநிலங்களிலும், தனியார் மருத்துவமனைகளிலும் 1.92 கோடி கரோனாதடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன” என கூறப்பட்டுள்ளது.- பிடிஐ