

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா, தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகர் பிரபாஸ் ஆகியோர் குறித்து புரளி கிளப்பிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா. இவர் சமீபத்தில் கட்சியின் வெற்றிக்காக பாதயாத்திரை மற்றும் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், சமூகவலை தளத்தில் இவரையும் தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகருமான பிரபாஸ் என்பவரையும் இணைத்து புகைப் படங்களுடன்கூடிய செய்திகள் வெளியாயின.
இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் அமைப்புகள், தொண்டர்கள் கொந்தளித்தனர். சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனிடையே நடிகர் பிரபாஸ் தரப்பிலும் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பிரபாஸ் இது குறித்து கூறியபோது “சில விஷமிகள் செய்யும் தவறுகளால், மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது, இது குறித்து உடனடியாக போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸில் ஷர்மிளா அளித்த புகாரில், நடிகர் பிரபாஸை இதுவரை நேரில் பார்த்ததுகூட இல்லை, அவதூறு பரப்பியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து அம்பர்பேட்டையில் இன்டர்நெட் மையம் நடத்தி வரும் பதி ரமேஷ், வாரங்கல் ஹசினி கொண்டா பகுதியைச் சேர்ந்த கார்த்தி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.