

ஜிகா வைரஸ் தொற்று கணிசமாக அதிகரித்துவரும் நிலையில், அது தொற்று நோய் இல்லாவிட்டாலும் கூட அதனை மிகுந்த கவனத்துடன் கண்காணித்து கையாள வேண்டும் எனக் கூறுகிறார் மருத்துவ நிபுணர்.
டெல்லி மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மருத்துவர் நரேஷ் குப்தா கூறியிருப்பதாவது:
ஜிகா வைரஸ் கரோனாவைப் போல் தொற்று நோய் அல்ல. ஆனால், ஜிகா வைரஸை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். கரோனா வைரஸ் பரவல் நாட்டில் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் கரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 98 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதம் 0.2% என்றளவிலேயே உள்ளது.
ஜிகா வைரஸ் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பரவி வருகிறது. இதனால், சம்பந்தப்பட்ட மாநிலமோ நகரமோ கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
ஜிகா வைரஸ் இந்தியாவுக்குப் புதிதல்ல. ஆனால், இப்போது அது எந்த மாதிரியாக உருமாறியிருக்கிறது என்பதை நாம் கண்டறியவேண்டும். தெரிந்த வைரஸாக இருந்தாலும் தெரியாத திரிபுகள் இருக்கின்றனவா என்று கண்காணிக்க வேண்டும். ஒருவேளை உருமாறியிருந்தால் அது எந்த மாதிரியான தாக்கங்களை உடலில் ஏற்படுத்துகிறது என்று கண்காணிக்க வேண்டும். இதனை முதலில் உறுதிப்படுத்திவிட்டால் போது ஜிகாவை எளிதில் கட்டுப்படுத்திவிடலாம்.
கரோனாவைப் போல் அதிகளவில் பரவவில்லை என்பதால் நாம் ஜிகாவை அசட்டை செய்யக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.