Published : 15 Jul 2021 08:29 PM
Last Updated : 15 Jul 2021 08:29 PM

ஆகஸ்ட் இறுதியில் கரோனா மூன்றாவது அலை தாக்கலாம்: ஐஎம்ஏ எச்சரிக்கை

ஆகஸ்ட் இறுதியில் கரோனா மூன்றாவது அலை தாக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Medical Research) எச்சரித்துள்ளது.

கரோனா இரண்டாவது அலை இந்தியாவில் கோரத் தாண்டவம் ஆடிய நிலையில், மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பிவருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் இறுதியில் கரோனா மூன்றாவது அலை தாக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின், தொற்று நோய்ப் பிரிவுத் தலைவர் மருத்துவர் சமீரன் பாண்டா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல விவரங்களைத் தெரிவித்துள்ளார்.

அவருடைய பேட்டியின் விவரம் பின்வருமாறு:

"இந்தியாவில் மூன்றாவது அலை கரோனா பாதிப்பு ஏற்படலாம். ஆகஸ்ட் இறுதியில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இரண்டாவது அலைபோல் கொடூரமான தாக்கம் இல்லாமல் போகலாம்.
கரோனா 4வது அலை ஏற்பட்டால் அதற்கு 4 விஷயங்கள் தான் காரணமாக இருக்க முடியும். முதலில் முதல் மற்றும் இரண்டாவது அலையில்

ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறையலாம். இரண்டாவதாக, புதிய உருமாறிய திரிபுகள் கரோனா நோய் எதிர்ப்புக்கு சவால் விடுக்கலாம். மூன்றாவதாக, புதிய வகை வைரஸால் நமக்கு ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பை அசைக்க முடியாததால் பரவலின் வீரியத்தை மட்டும் அதிகரிக்கலாம். நான்காவதாக ஊரடங்கில் மாநில அரசுகள் முன்கூட்டியே தளர்வுகளை அறிவிக்குமானால் அது புதிய தொற்றுகளுக்கு வழிவகுக்கலாம்"

இவ்வாறு அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "டெல்டா, டெல்டா பிளஸ் ஆகிய இரண்டு திரிபுகளுமே நாட்டில் பரவலாக காணப்படுகின்றன. ஆனால், அவை பெரிய அளவில் பொது சுகாதாரத்துக்கு சவால் விடுத்ததாக எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்.

முன்னதாக ஐஎம்ஏ மருத்துவக் குழுவானது, "நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றுலா தலங்களில் கூட்டம் குவிந்தி வருகிறது. கோயில் புனித தலங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிகின்றனர். பொது மக்களும் சரி மத்திய, மாநில அரசுகளும் சரி அலட்சியத்துடன் செயல்படுவதாகவே தோன்றுகிறது" எனக் கூறியது கவனிக்கத்தக்கது.

அதேபோல், இன்று காலை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறும்போது, “துரதிர்ஷ்டவசமாக நாம் மூன்றாம் அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். டெல்டா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் கரோனா தொற்றும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளன. டெல்டா வைரஸ் தற்போது உலகில் 111 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த நான்கு வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x