டெல்டா பிளஸ் வைரஸ்; 3-வது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை

டெல்டா பிளஸ் வைரஸ்; 3-வது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை
Updated on
1 min read

டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் கரோனா 3-வது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-வது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

கரோனா தடுப்பு வழிமுறைகளான சமூக விலகல், முகக்கவசம், தடுப்பூசி செலுத்துதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்றாவிட்டால், 3-வது அலை விரைவாக வருவது சாத்தியம் என்று ஏற்கெனவே மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கரோனா 2-வது அலையே இன்னும் முடியாத நிலையில், கரோனா 3-வது அலை, ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் தாக்க வாய்ப்புள்ளதாகவும், செப்டம்பர் மாதத்தில் உச்சத்தை அடையும் என்றும் எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது.

28 ஆய்வகங்களின் கூட்டமைப்பான இன்சாகோக்கின் சமீபத்திய கண்டறிதல்களை தொடர்ந்து கவலையளிக்கக்கூடிய டெல்டா பிளஸ் வகை குறித்த அறிவுறுத்தலை மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. நாடுமுழுவதும் சில மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் கரோனா 3-வது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக யுபிஎஸ் பங்கு சந்தை ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கரோனா 2-வது அலை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. நாட்டின் 20 மாவட்டங்களில் ஏற்பட்ட கரோனா தொற்றே நாட்டில் 2-வது அலை பரவ காரணமாக இருந்தது. தற்போதும் சில மாவட்டங்களில் கரோனா தொற்று குறையவில்லை. குறிப்பிட்ட பகுதிகளில் சற்று அதிகரித்து வருகிறது.

இந்த கரோனா பரவல் அதிகரித்து வருவதற்கு டெல்டா பிளஸ் வைரஸ் காரணமாக உள்ளது. இதனை சில ஆய்வுகள் ஏற்கெனவே உறுதிப்படுத்தியுள்ளன. எனவே மக்கள் இந்த விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in