

ஹரியாணாவில் 100 விவசாயிகள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலையில் தான், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விடுதலை போராட்ட வீரர்களை ஒடுக்க கொண்டு வரப்பட்ட தேசத் துரோகச் சட்டம் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் தேவையா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
ஆனால், பிற்பகலில் ஹரியாணா போலீஸார் 100 விவசாயிகள் மீது தேசத் துரோக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
துணை சபாநாயகர் ரன்பீர் கங்வா சென்ற காரை தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜீலை 11ஆம் தேதியன்று ஹரியாணாவின் சிர்ஸா மாவட்டத்தில் துணை சபாநாயகர் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்படது. இந்தத் தாக்குதலில் அவரது கார் சேதமடைந்தது.
இந்நிலையில், 100 விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்கு, தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்யுக்தா கிசான் மோர்சா தலைவர்களான ஹர்சரண் சிங், பிரஹலாத் சிங் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "சம்யுக்தா கிசான் மோர்சா இதனை வன்மையானக் கண்டிக்கிறது. விவசாயிகள் மீது போலியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் விரோத பாஜக அரசு இதன் பின்னணியில் உள்ளது" என்று கூறியுள்ளனர்.
முன்னதாக இன்று காலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறுகையில், போலீஸார் யார் மீதாவது பகைவைத்துவிட்டால் சட்டப்பிரிவு 124 ஏ-வை பயன்படுத்துகின்றனர். இதனால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். காலனி ஆதிக்கச் சட்டம் இனியும் தேவையா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில்தான் 100 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.