Published : 15 Jul 2021 03:01 PM
Last Updated : 15 Jul 2021 03:01 PM

கரோனா 2-வது அலை; உ.பி. அரசின் நடவடிக்கை ஈடு இணையில்லாதது: பிரதமர் மோடி பாராட்டு

கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த உ.பி. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஈடு இணையில்லாத ஒன்று என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி சென்றுள்ளார். அவரை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் குழந்தை மருத்துவப் பிரிவு, கோடௌலியாவில் பல அடுக்குகள் கொண்ட வாகன நிறுத்தம், கங்கை ஆற்றில் சுற்றுலா வளர்ச்சிக்காக கப்பல் போக்குவரத்து, வாரணாசி காசிபூர் நெடுஞ்சாலையில் மூன்று வழி மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ரூ. 744 கோடி மதிப்பிலான திட்டங்கள் பயன்பாட்டிற்கு வரும். மேலும் ரூ. 839 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் மற்றும் பொது பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

மத்திய பெட்ரோ ரசாயனங்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் திறன் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மையம், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 143 ஊரக திட்டங்கள், கார்கியான்வில் ஒருங்கிணைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் காய்கறி கிடங்கு உள்ளிட்டவற்றையும் அவர் திறந்து வைத்தார்.

ஜப்பான் ஆதரவுடன் கட்டமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையமான ருத்ராக்ஷை பிரதமர் மோடி பின்னர் திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாடுமுழுவதும் கரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்தநேரத்தில் கரோனா பரவலை எதிர்த்து நாடுமுழுவதும் போராடி வருபவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவிட் வைரஸை எதிர்த்து, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் வலிமையுடனும் சிறப்புடனும் செயல்பட்டது. வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த உ.பி. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஈடு இணையில்லாதது.

கரோனாவை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். இதுவே அரசின் இலக்கு. இதற்காவே அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டிலேயே அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது உ.பி.யில் தான்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

அதன்பிறகு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தாய் மற்றும் குழந்தை மருத்துவப் பிரிவை அவர் ஆய்வு செய்வார். மேலும் கோவிட் தொடர்பான தயார்நிலை குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x