

தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி ரூ. 1500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்து வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி சென்றுள்ளார். அவரை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் குழந்தை மருத்துவப் பிரிவு, கோடௌலியாவில் பல அடுக்குகள் கொண்ட வாகன நிறுத்தம், கங்கை ஆற்றில் சுற்றுலா வளர்ச்சிக்காக கப்பல் போக்குவரத்து, வாரணாசி காசிபூர் நெடுஞ்சாலையில் மூன்று வழி மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ரூ. 744 கோடி மதிப்பிலான திட்டங்கள் பயன்பாட்டிற்கு வரும். மேலும் ரூ. 839 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் மற்றும் பொது பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
மத்திய பெட்ரோ ரசாயனங்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் திறன் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மையம், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 143 ஊரக திட்டங்கள், கார்கியான்வில் ஒருங்கிணைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் காய்கறி கிடங்கு உள்ளிட்டவற்றையும் அவர் திறந்து வைத்தார்.
ஜப்பான் ஆதரவுடன் கட்டமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையமான ருத்ராக்ஷை பிரதமர் மோடி பின்னர் திறந்து வைக்கவுள்ளார். அதன்பிறகு, பிற்பகல் 2 மணிக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தாய் மற்றும் குழந்தை மருத்துவப் பிரிவை அவர் ஆய்வு செய்வார். மேலும் கோவிட் தொடர்பான தயார்நிலை குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.