ரயில் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசுடன் தமிழக அரசு இணைகிறது: நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை தீரும்

ரயில் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசுடன் தமிழக அரசு இணைகிறது: நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை தீரும்
Updated on
1 min read

மத்திய அரசுடன் தமிழக அரசும் இணைந்து பணியாற்றவுள்ளதால், ரயில் திட்டங்களுக்கு தடையாகவுள்ள நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும், திட்டங்களை விரைவாக முடிக்க முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே துறையில் பெரும்பாலான திட்டங்களை அமல்படுத்த, போதிய நிதி இல்லை. இதனால், முக்கியமான திட்டங்களுக்கு ஓரளவுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. மற்ற திட்டங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கின்றன. குறிப்பாக தமிழகத்தின் முக்கிய திட்டமான சென்னை கன்னியாகுமரி இடையே இரட்டை வழிப்பாதையாக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கிறது. இதேபோல் பல அகலப்பாதை திட்டங்கள், புதிய பாதை திட்டங்களும் கிடப்பில் இருக்கின்றன.

இதற்கிடையே, மாநில அரசுகளுடன் இணைந்து ரயில்வே திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, ஆர்வமுள்ள மாநில அரசுகளுடன் ரயில்வே திட்டப் பணிகளை இணைந்து நிறைவேற்ற ரயில்வே துறை தயாராகவுள்ளது. இவ்விஷயத்தில் தமிழக அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு மொத்தம் ரூ.2 ஆயிரத்து 42 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, திண்டுக்கல் சபரிமலை இடையே புதிய பாதை, மொரப்பூர் தருமபுரி இடையே புதிய பாதை, 13 ரயில்வே மேம்பாலங்கள், 84 சுரங்கப் பாதைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, “தமிழகம் போன்ற மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதனால், திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும்” என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரயில்வே துறை பெரியதாக இருப்பதாலும், ஆயிரக் கணக்கான ரயில் திட்டங்களை செயல்படுத்துவதாலும் திட்டங்களுக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவது பெரிய பிரச்சினையாக உள்ளது. மேலும், தேவையான நிதியை ரயில்வே பட்ஜெட்டில் ஒரே முறையாக ஒதுக்கீடு செய்ய முடியாது. இதனால் திட்டங்களை நிறைவேற்ற பல ஆண்டுகள் ஆகிவிடுகிறது. இதற்கிடையே, மாநில அரசுகளுடன் இணைந்து திட்டங்கள் செயல்படுத்தலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது சிறப்பான ஒன்றாகும்.

குறிப்பாக தமிழகத்துக்கு தேவையான திட்டங்களுக்கு தமிழக அரசு விரைவில் போதிய நிலத்தை ஒதுக்கீடு செய்து தரும். இதனால் திட்டங்களை உடனடியாக முடிக்க முடியும். குறிப்பாக தமிழக அரசின் தொலைநோக்கு திட்டத்தின்படி ரயில்வே திட்டங்களை செயல்படுத்த முடியும். ரயில் திட்டங்களின் தன்மைக்கு ஏற்றவாறு நிதி பங்களிப்பு மாறும். நிதி பங்களிப்பு, கூட்டு ஒப்பந்தம் உள்ளிட்ட விதிமுறைகளை ரயில்வே துறை வகுத்து விரைவில் வெளியிடும் என நம்புகிறோம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in