Published : 14 Jul 2021 07:13 PM
Last Updated : 14 Jul 2021 07:13 PM

மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதா?- தடுப்பூசி விவகாரத்தில் மன்சுக் மாண்டவியா கடும் சாடல்

புதுடெல்லி

நாட்டில் கோவிட் தடுப்புமருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், தடுப்பூசிகள் தாமதமாக கிடைப்பதாகவும் சில மாநிலங்களும், அரசியல் கட்சியினரும் கூறி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என குறிப்பிட்டுள்ள அவர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த இவ்வாறு கூறப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

நாட்டில் கோவிட் தடுப்புமருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், தடுப்பூசிகள் தாமதமாக கிடைப்பதாகவும் சில மாநிலங்களும், அரசியல் கட்சியினரும் கூறி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை.

இத்தகைய கூற்றுகள் உண்மையின் அடிப்படையிலானவை அல்ல. மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த இவ்வாறு கூறப்படுகிறது.

ஆதாரம், உண்மைகளின் அடிப்படையில் தற்போதைய நிலைமையை நன்றாக புரிந்துக் கொள்ள முடியும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், 11.46 கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகத்தால் 2021 ஜூன் மாதம் கிடைக்க செய்யப்பட்டன. இது 13.50 கோடி டோஸ்களாக ஜூலை மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தடுப்புமருந்து நிலவரம் குறித்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட பின்னரும் நிர்வாக குறைபாடு மற்றும் பயனாளிகளின் நீண்ட வரிசைகள் காணப்படுகிறது என்றால் பிரச்சினை என்ன, அதற்கு காரணம் யார் என்பது தெளிவாக புலப்படுகிறது.

மக்களிடையே அச்சம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் மூலம் செய்திகளை பரப்புவோர், ஆளுகை செயல்முறையில் இருந்தும், அவர்களுக்கு வழங்கப்படும் தகவல்களில் இருந்து தங்களை தாங்களே தூரமாக்கிக் கொண்டுள்ளார்களா?தடுப்புமருந்து நிலவரம் குறித்து முன்கூட்டியே வழங்கப்படும் சரியான தகவல் குறித்து அறியாமல் இருக்கிறார்களா என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x