

உத்தரப்பிரதேசம் நொய்டாவில் நம் நாட்டின் தேசியப் பறவையான மயிலின் முட்டைகளை பொறித்து உண்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் மீதான இந்த குற்றச்சாட்டை நொய்டாவின் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி அங்கு வாழும் பறவைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவற்றில் வீட்டு வளர்ப்பு பிராணிகள் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, வனப்பறவையான மயிலும் பாதுகாக்கப்பட்ட பிராணியாகும். இதை சேதப்படுத்துவதும் அதன் முட்டைகளை உண்பதும் சட்டப்பட்டி தண்டனைக்கு உரியன.
இந்நிலையில், உ.பி.யின் கவுதம்புத் நகர் மாவட்டத்தின் கிரேட்டர் நொய்டாவின் ரபுரா கிராமத்தின் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதில், தம் பகுதியிலுள்ள நால்வர் மயிலின் முட்டைகளை கொண்டு வந்து ஜேவர் தாலுக்காவின் பிராபூர் கிராமத்தின் காலி நிலத்தில் நெருப்பு மூட்டி பொறித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவற்றை அந்நால்வரில் ஒருவரது வீட்டில் வைத்து உண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ரபுரா காவல்நிலைய ஆய்வாளரான தினேஷ் யாதவ் கூறும்போது, ‘‘உண்டதாகக் குறிப்பிட்ட வீட்டில் மயில் முட்டைகளின் ஓடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றை ஆய்விற்கு அனுப்பி ஆதாரங்கள் கிடைத்த பின் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்.’’ எனத் தெரிவித்தார்.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி இப்புகாரின் நால்வர் மீது குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும். நிரூபணத்திற்கு பின் அவர்களுக்கு 3 முதல் 6 வருடம் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.