Last Updated : 14 Jul, 2021 08:12 AM

 

Published : 14 Jul 2021 08:12 AM
Last Updated : 14 Jul 2021 08:12 AM

அனைவருக்கும் தடுப்பூசி வெற்று வார்த்தை: பற்றாக்குறை உண்மை; உற்பத்தி மிகைப்படுத்தல்: மத்திய அரசு மீது ப.சிதம்பரம் சாடல்


இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற மத்திய அரசின் வாக்குறுதி வெற்று வாக்குறுதி, பொய்யானது என்று மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாகச் சாடியுள்ளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சரான ப.சிதம்பரம் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஒடிசா, டெல்லி மாநிலங்கள் தடுப்பூசி பற்றாக்குறை என்று கூறுகின்றன. அனைத்து மாநிலங்களுக்கும் தடங்கல் இன்றி தடுப்பூசி எப்போது கிடைக்கும், அதை எவ்வாறு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்யப் போகிறார்.

தடுப்பூசி பற்றாக்குறை உண்மை, தடுப்பூசி உற்பத்தி மிகைப்படுத்தப்படுகிறது. தடுப்பூசி இறக்குமதி என்பது புதிராக இருக்கிறது. 2021 டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்பது வெற்று வாக்குறுதி. தடுப்பூசி திட்டம் குறித்தும் புதிதாக பதவி ஏற்றுள்ள சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்க வேண்டும்.

ஒடிசா, டெல்லி மாநிலங்களில் தடுப்பூசி இல்லை. திங்கள்கிழமை 33 லட்சம் தடுப்பூசிகள்தான் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், டிசம்பர் மாதத்துக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற திட்டத்தில் நாம் பயணித்தால், நாள்தோறும் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

ஆதலால், அந்த இலக்கை அடைய சாத்தியமில்லை. போதுமான அளவு தடுப்பூசி இருக்கிறது என்று மத்திய அரசு கூறுவது பொய்யானது. தடுப்பூசி உற்பத்தி குறித்து மத்திய அரசு மிகைப்படுத்துகிறது.

மத்திய சுகதாார அமைச்சர் தடுப்பூசி விவகாரத்தில் உண்மை நிலவரத்தை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தவிர்த்து மற்ற தடுப்பூசிகள் இறக்குமதி என்ன ஆயிற்று, இதுவரை வெளிநாடுகளில் இருந்து எந்தத் தடுப்பூசியும் இறக்குமதி செய்யாதது ஏன் என்று மத்திய அமைச்சர் விளக்க வேண்டும்.

மக்களிடம் முதல்முறையாக உண்மையைக் கூறுவதற்கு சுகாதார அமைச்சருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாகும். மக்களிடம் உண்மையைக் கூறாத ஹர்ஸவரத்தன் அதற்கு விலை கொடுத்துவிட்டார், அந்த உண்மை தற்போதுள்ள அமைச்சருக்குத் தெரியும்.

மூன்றாவது அலையும் மோசமாக இருக்கும். நான் யாரையும் அச்சுறுத்தவில்லை. மூன்றாவது அலை வரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன். ஆனால், 3-வது அலை நாட்டில் ஏற்பட்டால், அதன் சூழல் மோசமாக இருக்கும்.

முன்எச்சரி்க்கை நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான நேரம், மருத்துமனைகளில் படுக்கை வசதியை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆக்சிஜன் சிலிண்டர்கள், தடுப்பூசியையும் அதிகப்படுத்த வேண்டும். பொருளாதாரமும் பாதி்க்கப்படாமல் இருக்க நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையை மத்திய அரசு உடனடியாகக் குறைக்க வேண்டும். மக்கள் அதிகமாக நுகரும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும், இறக்குமதி வரியையும் குறைக்க வேண்டும்.

நாட்டில் பணவீக்கம் உயர்வுக்கு மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசே நேரடிப் பொறுப்பு. தவறான கொள்கைகளுக்கும், பொருளாதாரத்தை சரிவர நிர்வாகம் செய்யவும் இந்த அரசுக்குத் தெரியவில்லை. விலை உயர்வு குறித்து வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் விரிவான விவாதம் நடத்தக் கோருவோம், மற்ற எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொண்டு மக்களுக்கு நிவாரணம்கிடைக்க வழி ஏற்படுத்துவோம்.

பணவீக்க இலக்கை 4 சதவீதமாகவும் அதற்கு மைனஸ் 2 சதவீதம் அல்லது கூடுதலாக 2 சதவீதமாகவும் வைக்கவே ரிசர்வ் வங்கி அரசுக்கு அறிவுறுத்தியது. ஆனால், தற்போது சில்லரை பணவீக்கம் இயல்பிலேயே 6 சதவீதத்தை எட்டிவிட்டது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியால் ஒவ்வொரு ஆண்டும் ரூ.4.20 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலிக்கிறது

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x