

நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக வும் சுருக்கமாகவும் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் கலவரம் வெடித்தது. இது தொடர்பான வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த கலவரத்துக்கு பேஸ்புக்கில் நடைபெற்ற தகவல் பரிமாற்றமே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி சட்டப்பேரவையின் அமைதி மற்றும் ஒருங்கிணைப்புக் குழு பேஸ்புக் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து, பேஸ்புக் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பேஸ்புக் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியது சரிதான் என கடந்த 8-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்புடன் நீதிபதிகள் 6 பக்கங்களில் ஒரு குறிப்பை எழுதி உள்ளனர். அதில், “நீதிபதிகள் தீர்ப்பு எழுதும்போது, ரென் அண்ட் மார்ட்டின் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.தெளிவாகவும், சுருக்கமாகவும், மனுதாரர் மற்றும் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் தீர்ப்புகளை எழுதவேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக சட்டத் துறையினர் விவாதிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த குறிப்பு எழுதப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த சில வழக்குகளின் மீது உச்ச நீதிமன்றம் சமீப காலங்களில் வழங்கிய தீர்ப்பு ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்டிருந்தன. ஆதார் எண் தொடர்பாக 2018-ம் ஆண்டு செப்டம்பரில் வெளியான தீர்ப்பு 1,448 பக்களைக் கொண்டிருந்தது. 2019 நவம்பரில் வெளியான அயோத்தி வழக்கின் தீர்ப்பு 1,045 பக்கங்களைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.