

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்றினால் மூன்றாவது அலையைத் தவிர்க்கலாம் என்று மத்திய சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மூன்றாவது அலை எப்போது வரும் என்று விவாதிக்காமல் அதைத் தடுக்க முற்படுவோம் என்று பிரதமர் கூறியதை நாம் அனைவரும் மதித்து நடப்போம் என நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் வலியுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் மூன்றாவது அலை பரவல் நடந்திருக்கிறது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் இந்தியாவை மூன்றாவது அலையிலிருந்து காப்பாற்றலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கரோனா தொற்று நிலவாரம் குறித்து சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் மக்கள் அனைவருமே கரோனா மூன்றாவது அலையைப் பற்றி பேசுகின்றனர். வானிலை முன்னறிவிப்பு போல் மூன்றாவது அலை இப்போது வரும் அப்போது வரும் என்று பேசுகிறார்கள். ஆனால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்றினால் மூன்றாவது அலையைத் தவிர்க்கலாம் என்பதையும், அதைக் கடைபிடிக்காவிட்டால் மூன்றாவது அலையை அனுபவிக்க நேரும் என்பதையும் உணர மறுக்கின்றனர்.
ஜூலை மாதம் தொடங்கியதிலிருந்து இதுவரை பதிவான கரோனா பாதிப்பில் 73.4% கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலேயே பதிவாகியுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட அசாம், மேகாலயா, ஒடிசா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு மத்தியக் குழு விரைந்துள்ளன. ஜூலை 13 உடன் முடிவடைந்த வாரத்தில் 55 மாவட்டங்களில் பாசிடிவிட்டி ரேட் 10 சதவீதமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.