

முககவசம் இல்லாமல் மக்கள் மலை பிரதேசங்கள், சந்தை பகுதிகளில் அதிக அளவு கூடுவது கவலை அளிப்பதாகவும் மாநில அரசுகள் இதனை சரியான முறையில் கவனித்து தீர்வு காண வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் கரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தணியத் தொடங்கியுள்ளது. தற்போது தினசரி கரோனா தொற்றுபாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்த சூழலில், வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலாயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்களுக்கு கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழுக்கள் அனுப்பப்பட்டன.
கரோனா தொற்று பரவலின் பாசிட்டிவ் விகிதம் நாட்டில் 73 மாவட்டங்களில் 10 சதவீதமாக இருந்தது என்று கடந்த வாரம் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்தது.
இதில் 46 மாவட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவை. இந்தநிலையில் வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அந்த மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர்களுக்கு தேவையான ஆலோசனைகளை பிரதமர் மோடி வழங்கினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கரோனா 2-ம் அலை குறைந்தாலும் தொற்று முற்றிலுமாக நீங்கவில்லை. உருமாறிய கோவிட் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவ நிபுணர்கள் அதுபற்றி தீவிர ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவிட் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூன்றாவது அலையை எதிர்த்து போராடுவதற்கு தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்த வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும். இதனை மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும்.
முககவசம் இல்லாமல் பொது மக்கள் மலை பிரதேசங்கள் மற்றும் சந்தை பகுதிகளில் கூடுவது கவலை அளிக்கிறது. இதனை சரியான முறையில் கவனித்து தீர்வு காண வேண்டும். மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் கரோனாவை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.