Last Updated : 19 Feb, 2016 09:40 AM

 

Published : 19 Feb 2016 09:40 AM
Last Updated : 19 Feb 2016 09:40 AM

நாடு முழுவதும் ஆம்புலன்ஸில் கிராமம் கிராமமாக சென்று இலவச சிகிச்சை அளிக்கும் குஜராத் பல் மருத்துவர்

குஜராத் மாநிலம் பரோடாவைச் சேர்ந்தவர் ராஜேந்திரசின் ரதோட். பல் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தற்போது இவருக்கு 64 வயதாகிறது. அதிக சம்பளம் அல்லது நகரங்களில் மட்டும் பணி ஒதுக்கீடு கேட்கும் மருத்துவர்களுக்கு மத்தியில், ஓய்வு பெற்ற பிறகும் கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச மாக சிகிச்சை அளித்து வருகிறார்.

இதற்காக ஆம்புலன்ஸில் கிளினிக் வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு கிராமம் கிராமமாக செல்கிறார் ரதோட். அந்த வேனில் அறுவை சிகிச்சை அளிப்பது உட்பட எல்லாவித வசதிகளும் உள்ளன. ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதை ‘மிஷன்’ போல செய்து வருகிறார். தற்போது 25 மாநிலங்களில் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்துவிட்டு ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ராஜ்கனிகா கிராமத்துக்கு நேற்று வந்தடைந்தார்.

மருத்துவ வசதிகள் இல்லாத குக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸில் சென்று ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். அத்துடன் பல் பாதிப்பை சரிப்படுத்த தேவையான மருந்து மாத்திரைகளையும் அறுவை சிகிச்சைகளையும் கூட இலவசமாகவே செய்து வருகிறார். இதுவரை 16 ஆயிரம் பேருக்கு மேல் இவர் சிகிச்சை அளித்துள்ளார். இதுகுறித்து ரதோட் கூறியதாவது:

அரசு நடத்தும் சுகாதார மையங்கள் இல்லாத, மருத்துவ வசதிகள் இல்லாத கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு பல் சிகிச்சை அளிப்பதுதான் எனது இலட்சி யம். நான் செல்லும் இடங்களில் எல்லாம், ஏராளமான ஏழைகள் வந்து சிகிச்சை பெற்று செல்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

தனியாக மருத்துவ சிகிச்சை அளித்து பணம் சம்பாதித்து வெறுத்து போய்விட்டேன். நான் கற்ற இந்த மருத்துவக் கல்வி மூலம் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. இது எனக்கு திருப்தியாக இருக்கிறது. வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியுடன் எனது இந்த பயணத்தை முடித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.

என்னிடம் தேவையான பணம் இருக்கிறது. அதனால் இலவச சிகிச்சை அளிப்பதில் பிரச்சினை இல்லை. மக்களிடம் பல் பாது காப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை. மேலும், ஒடிசாவில் பெரும் பாலான அரசு மருத்துவமனைகளில் பல் மருத்துவர்களோ அல்லது பிரிவோ இல்லாதது வருத்தம் அளிக் கிறது.

இவ்வாறு ரதோட் கூறினார்.

ரதோட்டுடன் அவரது மனைவி புஷ்பகுமாரியும் உடன் செல்கிறார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி தனது சமூக சேவையை ரதோட் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x