Published : 13 Jul 2021 02:22 PM
Last Updated : 13 Jul 2021 02:22 PM

‘‘மேகதாது அணை கட்டும் பணி விரைவில் தொடங்கும்’’- ஜல்சக்தித்துறை அமைச்சர் சந்திப்புக்குப் பின் எடியூரப்பா பேட்டி

பெங்களூரு

மேகதாது அணை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும், தமிழகம் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழக முதல்வர், பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்துத் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சமீபத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரினார்.

மேகதாது அணை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனக் கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடக முதல்வருக்கு பதில் கடிதம் எழுதினார்.

இந்தச் சூழ்நிலையில் மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க தமிழகத்திலுள்ள சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.
மேகதாதுவில் அணை கட்டுவதில் 100 சதவிகிதம் உறுதியாக இருப்பதாகவும், அணை கட்ட கர்நாடகாவுக்கு உரிமை உண்டு எனவும் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று கூறினார்.

இந்தநிலையில் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று பெங்களூரு வந்தார். கர்நாடக மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் குடிநீர் திட்டங்கள் ஆய்வு மேற்கொண்டார்.

கஜேந்திர சிங் ஷெகாவத்

இந்தக் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பங்கேற்றார். கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, நீர்வளத்துறை அமைச்சர் மாதுசாமி ஆகியோரும் பங்கேற்றனர்.

அப்போது மேகதாது அணை திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கவேண்டும் என கர்நாடகா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுகுறித்து கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில் ‘‘மேகதாது உட்பட கர்நாடகாவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும். அதே சமயம் சட்டப்படி மத்திய அரசு முடிவெடுக்கும்’’ எனக் கூறினார்.

பின்னர் எடியூரப்பா கூறியதாவது:
மேகதாது அணை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும். மத்திய அரசிடம் அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்துள்ளோம். மத்திய அரசு உரிய அனுமதியை வழங்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழகம் குறித்தும் நான் பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x