

மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை குழுக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்மிருதி இரானி, பூபேந்தர் யாதவ், சர்பானந்த சோனாவால் ஆகியோருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைைமயிலான அரசு 2019-ம் ஆண்டு பதவி ஏற்றபின் அமைச்சரவை மாற்றப்படாமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் 15 கேபினட் அமைச்சர்கள், 28 அமைச்சர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டனர்.
இதில் 30க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் கொண்ட 43 பேர் அமைச்சர்கள் பதவி ஏற்றனர். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு 7 பெண் அமைச்சர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து அமைச்சரவை குழுக்களும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. ஸ்மிருதி இரானி, பூபேந்தர் யாதவ், சர்பானந்த சோனாவால் ஆகியோருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் ஸ்மிருதி இரானி, பூபேந்தர் யாதவ், சர்பானந்த சோனாவால் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே இந்த குழுவில் ராஜ்நாத், அமித்ஷா, நிதின் கட்காரி, தோமர், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், கிரிராஜ் சிங், மனுசுக் மாண்ட்வியா, ஆகியோர் உள்ளனர்.
அமைச்சரவையில் புதியவர்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதை போலவே முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைச்சரவை குழுக்களிலும் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அர்ஜூன் முண்டா, வீரேந்திர குமார், கிரண் ரிஜ்ஜு, அனுராக் தாக்கூர், ஆகியோருக்கும் அமைச்சரவைக் குழுவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில், வீரேந்திர குமார், கிரண் ரிஜ்ஜூ, அனுராக் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஏற்கெனவே இந்த குழுவில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தொடருகின்றனர்.
பிரதமர் தலைமையிலான முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை குழுவில் நாராயன் ரானே, ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அஸ்வின் வைஸ்ணவ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் தலைமை வகிக்கும் வேலைவாய்ப்பு மற்றும் தனி நபர் பயிற்சிக்கான அமைச்சரவை குழுவில், அஸ்வினி வைஸ்ணவ், பூபேந்தர் யாதவ், ராமச்சந்திர பிரசாத் சிங் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
பாதுகாப்பு தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைச்சரவை குழுவில் மட்டும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த குழுவில் பிரதமர் மோடி, ராஜ்நாத், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதுபோலவே பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் மட்டும் இடம்பெற்றுள்ள நியமனத்திற்கான அமைச்சரவை குழுவிலும் எந்த மாற்றமும் செய்யவில்லை.