

சீனாவில் உள்ள ஃபுஜாவு என்ற இடத்தில் வரும் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை உலக பாரம்பரிய குழு கூட்டம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. இக்குழுவில் உலக பாரம்பரிய சின்னங்கள் குறித்து ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆய்வறிக்கைகள், ஆதாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதில், தெலங்கானா மாநிலம், வாரங்கலில் உள்ள காக்கதீயர்கள் காலத்தில் கட்டப்பட்ட காக்கதீய ருத்ரேஷ்வரா கோயில் எனப்படும் ராமப்பா கோயில் மற்றும் குஜராத்தில் உள்ள துலாவிரா ஹரப்பன் நினைவு சின்னங்களும் கடந்த 2014-ம் ஆண்டு தற்காலிக பட்டியலில் இடம்பெற்றிருந்தன. தற்போது இந்த இரு பாரம்பரிய சின்னங்கள் குறித்து இம்மாதம் சீனாவில் நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது.
ராமப்பா கோயில் குறித்து, வாரங்கல் காக்கதீயா பாரம் பரிய அறக்கட்டளை குழு உறுப்பினர் பாண்டுரங்கா ராவ் கூறும்போது, ‘‘யுனெஸ்கோ கேட்டுக் கொண்டதற்கு இணங்கபல ஆதாரங்களை அனுப்பி உள்ளோம். தவிர கல்வெட்டுகள் உட்பட மேலும் 9 ஆதாரங்களையும் அனுப்பி வைத்துள்ளோம்’’ என கூறினார்.
வாரங்கல் கோட்டை, ஆயிரங்கால் மண்டபம், சுயம்பு கோயில், கீர்த்தி தோரணங்கள் போன்றவையும் பிரசித்தி பெற்றவை. இந்த கோயில் 808 ஆண்டுகள் பழமையானது.