கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கேரளா, மகாராஷ்டிராவில் மத்திய குழு ஆய்வு: மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் தகவல்

பாரதி பிரவீண் பவார்
பாரதி பிரவீண் பவார்
Updated on
1 min read

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கேரளா, மகாராஷ்டிராவில் மத்திய குழு ஆய்வு செய்கிறது என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா முதல் அலை கடந்த செப்டம்பரில் உச்சத்தில் இருந்தது. அப்போது தினசரி வைரஸ் தொற்று ஒரு லட்சத்தை நெருங்கியது. இதன்பிறகு கடந்த மே மத்தியில் கரோனா 2-வது அலை உச்சத்தை தொட்டது. அப்போது நாள்தோறும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டது.

தற்போது நாடு முழுவதும் வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. ஆனால் கேரளா, மகாராஷ்டிராவில் மட்டும் நாள்தோறும் சராசரியாக 10,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. தற்போது கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றும் பரவி வருகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் கூறியதாவது:

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாள்தோறும் கரோனா பரவல் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கரோனா தொற்று அதிகரிக்கும் மாநிலங்களுக்கு மத்திய குழு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறது. மாநில அரசுகள் அளிக்கும் விவரங்களை ஆய்வு செய்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பொதுமக்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கேரளா, மகாராஷ்டிராவை தவிர்த்து ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி தொற்று சற்று அதிகமாக உள்ளது. இந்த மாநிலங்களில் நாள்தோறும் சராசரியாக 2,000 முதல் 3,000 பேருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. எனவே தென்மாநிலங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in